எனது ஃபிட்னஸை விட, கர்நாடகாவின் ஃபிட்னஸே முக்கியம்: மோடிக்கு குமாரசாமி பதிலடி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொண்ட மோடி, தான் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை இன்று சமூக தளத்தில் வெளியிட்டார்.
எனது ஃபிட்னஸை விட, கர்நாடகாவின் ஃபிட்னஸே முக்கியம்: மோடிக்கு குமாரசாமி பதிலடி


பெங்களூரு: கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொண்ட மோடி, தான் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை இன்று சமூக தளத்தில் வெளியிட்டார்.

விராட் கோலியின் சவாலை தான் ஏற்றுக் கொண்டதாகவும், தான் இதே உடற்பயிற்சி சவாலை கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமிக்கு விடுப்பதாகவும் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியமைக்க நடத்திய அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸுடன் கைகோர்த்துக் கொண்டு தவிடுபொடியாக்கி, முதல்வரானவர் மஜத தலைவர் குமாரசாமி. இதையடுத்து, வரும் மக்களவைத் தேர்தலிலும் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க முடிவு செய்து தற்போதே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன.
 

இந்த நிலையில், புது தில்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடி காலை நேரத்தில் தான் மேற்கொண்ட யோகா பயிற்சி, பிரணயாமம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை விடியோவாக பதிவு செய்து அதனை சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் குமாரசாமிக்கு உடற்பயிற்சி சவாலை விடுப்பதாகவும் மோடி கூறியிருந்தார். ஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி சரியான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குமாரசாமி கூறியிருப்பதாவது, உங்கள் சவாலை நான் மதிக்கிறேன். எனது உடல்நிலை குறித்து அக்கறை செலுத்திய உங்களுக்கு நன்றி.

உடல் நலம் என்பது அனைத்துக்குமே தேவை என்பதை நான் நம்புகிறேன். எனது அன்றாட பணிகளில் யோகா பயிற்சியையும் நான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன்.

அதே சமயம், எனது உடல் நலனை விட, எனது மாநிலத்தின் நலனுக்கு நான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறேன். எனது மாநிலத்தின் நலனைக் காக்க, மேம்படுத்த உங்களது ஆதரவும் தேவைப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com