காஷ்மீர் தொடர்பான ஐநா மனித உரிமை அமைப்பின் அறிக்கை: இந்தியா கண்டனம்  

காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐநா மனித உரிமை அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் தொடர்பான ஐநா மனித உரிமை அமைப்பின் அறிக்கை: இந்தியா கண்டனம்  

புதுதில்லி: காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐநா மனித உரிமை அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜுலை  2016 துவங்கி ஏப்ரல் 2018 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா மனித உரிமை அமைப்பானது விசாரணை  நடத்தி, 49 பக்க அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் தொடர்பாக ஐநா மனித உரிமை அமைப்பானது இவ்வாறு அறிக்கை வெளியிடுவது இதுவே முதன் முறையாகும். இந்த அறிக்கையில் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இரு பகுதிகளிலும் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடும் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் சட்டப் பூர்வ பாதுகாப்பு குறித்தெல்லாம் விரிவாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐநா மனித உரிமை அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவ்மர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா இந்த அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறது. இது முற்றிலும் தவறானது; உள்நோக்கம் கொண்டது மற்றும் தூண்டுதலின் பேரில் உருவாக்கப்பட்டது. இப்படி ஒரு அறிக்கையினை வெளியிடுவதன் பின்னுள்ள நோக்கத்தினை குறித்து நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். இது பெரும்பாலும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இது அதிகம் பாரபட்சமானது மற்றும் தவறான தகவல்களை பரப்பும் வகையில் அமைந்துள்ளது.     

சுருக்கமாக இந்த அறிக்கையானது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பூகோள ஒற்றுமையை மீறும் வகையில் அமைநதுள்ளது. ஜம்மு காஷ்மீர் எப்பொழுது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

இவ்வாறு தெரிவித்த ரவ்மர் ஐநா மனித உரிமை அமைப்பின் தலைவரான ஜோர்டானைச் சேர்ந்த ஸிய்டு ஹுசைனின் தார்மீகத் தகுதி குறித்தும் கேள்விகள் எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com