கடன் மோசடி வழக்கு: மல்லையாவுக்கு எதிராக புதிதாக குற்றப்பத்திரிகை

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டமைப்பிடம் ரூ.6,027 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில், விஜய் மல்லையா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் விரைவில்
கடன் மோசடி வழக்கு: மல்லையாவுக்கு எதிராக புதிதாக குற்றப்பத்திரிகை

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டமைப்பிடம் ரூ.6,027 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில், விஜய் மல்லையா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் விரைவில் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது.
இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கலின் மூலமாக, சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட "தலைமறைவு நிதி மோசடியாளர் அவசரச் சட்டமசோதா'-வின் கீழ், மல்லையா மற்றும் அவரது நிறுவனத்தின் ரூ.9,000 கோடி சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நீதிமன்ற அனுமதியை உடனடியாக அமலாக்க இயக்குநரகம் கோர இயலும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில் மல்லையாவுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கில் இதுவரையில் ரூ.9,890 கோடி மதிப்பிலான அவரது நிறுவன சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2005-2010 காலகட்டத்தில் வங்கிகள் கூட்டமைப்புக்கு ரூ.6,027 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக பாரத ஸ்டேட் வங்கி அளித்துள்ள புகாரின் பேரிலான வழக்கில் அமலாக்க இயக்குநரகம் தற்போது புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த முதல் தகவலறிக்கையின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள அமலாக்க இயக்குநரகம், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த வழக்கில், கடந்த 2005-2010 காலகட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் கூட்டமைப்பு வங்கிகள் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் 2009-10 காலகட்டத்தில் அந்த நிறுவனம் கடன் தொகையை திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து அந்தத் தொகை வாராக்கடனாக மாறியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com