காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. முன்னதாக, புனித ரமலான் மாதத்தையொட்டி, நல்லெண்ண அடிப்படையில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் ரமலான் நாள் வரையிலும் சண்டை நிறுத்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
ஆனால், இதே காலகட்டத்தில் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தவில்லை. குறிப்பாக, ""ரைசிங் காஷ்மீர்'' பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் ராணுவ வீரர் ஒளரங்கசீப் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர்.
இப்படியொரு சூழலில், பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டை நிறுத்த நடவடிக்கையை நீட்டிப்பதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ""பயங்கரவாத மற்றும் வன்முறை இல்லாத சூழலை ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுத்தும் நோக்கில் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது'' என்றார். அவர் மேலும் கூறியதாவது:
சண்டை நிறுத்த நடவடிக்கையை எழுத்தளவிலும், செயல் அளவிலும் கடைப்பிடித்த பாதுகாப்பு படைகளின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவிக்கிறது. முஸ்லிம் சகோதர, சகோதரிகள் ரமலான் பண்டிகையை அமைதியான சூழலில் கொண்டாட இது வழிவகை செய்தது. அரசின் இந்த முயற்சியை வெற்றிக் கொள்ள செய்வதில் எல்லோரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால், பாதுகாப்பு படைகள் குறிப்பிடத்தக்க வகையில் கட்டுப்பாட்டை கடைப்பிடித்த போதிலும், அவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் தங்களது தாக்குதல்களை பயங்கரவாதிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். இதன் விளைவாக சில மரணங்கள் நிகழ்ந்தன; காயங்கள் ஏற்பட்டன.
மீண்டும் தொடரும்: தற்போது, பயங்கரவாதிகளால் நடத்தப்படும் வன்முறை மற்றும் படுகொலையை தடுக்க பாதுகாப்பு படைகள் இதற்கு முன்னர் 
எடுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் வன்முறை மற்றும் பயங்கரவாத தாக்குதல் அல்லாத சூழலை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
அமைதியின் பாதைக்கு திரும்பாதவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு, அமைதியை விரும்பும் அனைத்து பிரிவு மக்களும் ஒன்று சேர்ந்து ஆதரவளிப்பது முக்கியமாகும். ஆக, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் தொடரும் என்றும் ராஜ்நாத் சிங். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த ஓராண்டில் மட்டும் 55 பயங்கரவாதிகளும், வன்முறையாளர்கள் 27 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதே சமயம், கடந்த 4 மாதங்களில் நிகழ்ந்த 80-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களால் காஷ்மீரில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com