மகாராஷ்டிர அரசின் ஓய்வூதியத்தை நிராகரித்தார் எழுத்தாளர் வினய் ஹர்திகர்

நெருக்கடி நிலையின்போது சிறையில் இருந்தோருக்கு மகாராஷ்டிர அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தை மூத்த எழுத்தாளர் வினய் ஹர்திகர் நிராகரித்து விட்டார்.
மகாராஷ்டிர அரசின் ஓய்வூதியத்தை நிராகரித்தார் எழுத்தாளர் வினய் ஹர்திகர்

நெருக்கடி நிலையின்போது சிறையில் இருந்தோருக்கு மகாராஷ்டிர அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தை மூத்த எழுத்தாளர் வினய் ஹர்திகர் நிராகரித்து விட்டார்.
இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் நெருக்கடி நிலையை அப்போதைய இந்திரா காந்தி அரசு அமல்படுத்தியபோது, அந்த முடிவை சிவசேனை கட்சி ஆதரித்தது. அதே சிவசேனை கட்சி, மகாராஷ்டிரத்தை தற்போது ஆளும் அரசில் அங்கம் வகிக்கிறது. இந்த அரசால் அளிக்கப்படும் ஓய்வூதியத்தை ஏற்பது சரியாக இருக்காது.
நெருக்கடி நிலையின்போது சிறையில் இருந்தோரை, 2 வகையாக பிரிக்கலாம். அதாவது, சத்யாகிரக போராட்டத்தில் இருந்தோரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். வன்முறையில் ஈடுபட்டோரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நக்ஸலைட்டுகளும் சிறையில் இருந்தனர். அவர்களில் யார்-யாருக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட இருக்கிறது என்பதை மகாராஷ்டிர அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
நெருக்கடி நிலையின்போது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ரொக்கமாக பணம் அளிக்க அரசு விரும்பியிருக்கலாம். தன்னை அரசியல் சார்பில்லாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் தெரிவித்து வரும் நிலையில், இது நியாயமான நடவடிக்கை இல்லை.
நெருக்கடி நிலை ரத்து செய்யப்பட்டு, ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என நான் விரும்பினேன். இந்திய ஜனநாயகத்துக்கு இழைத்த அநீதி காரணமாக, இந்திரா காந்தி அரசியல் ரீதியில் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நான் நினைத்தேன். அந்த 2 விருப்பங்களும், கடந்த 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பூர்த்தியாகிவிட்டது. அத்தேர்தலில் இந்திரா காந்தி அரசு படுதோல்வியை சந்தித்தது. என்னை பொறுத்தவரையில், அந்த வெட்கத்துக்குரிய அத்தியாயம் அத்துடன் முடிந்துவிட்டது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யாருக்கும் இழப்பீடு அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் தற்போதும் கடினமாக உழைக்கிறேன். அதனால் எனக்கு ஓய்வூதியம் தேவையில்லை என்றார் அவர்.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இருந்தபோது வினய் ஹர்திகர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தனது சிறை அனுபவம் குறித்து வினய் ஹர்திகர் பிறகு புத்தகம் எழுதினார். அந்த புத்தகமானது, மகாராஷ்டிர அரசின் விருதுக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த முடிவை மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
நெருக்கடி நிலை காலத்தில் சிறையில் இருந்தோருக்கு ஓய்வூதியம் அளிப்பது தொடர்பாக மகாராஷ்டிர அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், நெருக்கடி நிலையின்போது ஒரு மாதத்துக்கும் மேல் சிறையில் இருந்தோருக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும், ஒரு மாதத்துக்கும் குறைவாக சிறையில் இருந்தோருக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரமும் ஓய்வூதியமாக அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com