உச்ச நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி: அரசின் நோக்கம் குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது

உச்ச நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட இருக்கும் விவகாரத்தில், அரசின் நோக்கம் குறித்து கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது
உச்ச நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி: அரசின் நோக்கம் குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது

உச்ச நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட இருக்கும் விவகாரத்தில், அரசின் நோக்கம் குறித்து கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் பின்பற்றப்பட்டு வரும் மரபுப்படி, தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி ரஞ்சன் கோகோய், புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும்.
இதனிடையே, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பேட்டியளித்தனர். இந்திய வரலாற்றில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்து செய்தியாளர்களுக்கு சக நீதிபதிகள் பேட்டியளித்தது இதுவே முதல்முறையாகும்.
இதனால், ரஞ்சன் கோகோயை தலைமை நீதிபதி பதவிக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்வாரா? அவரை மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்குமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
இதுவொரு கற்பனையான கேள்வியாகும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக கடைப்பிடிக்கப்படும் மரபு மிகத் தெளிவாக உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர், தனக்கு அடுத்து மூத்த நீதிபதியாக இருப்பவரின் பெயரை தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்வார்.
அந்த பரிந்துரை, மத்திய அரசுக்கு வரும்போது, அதன் மீது நாங்கள் ஆலோசனை நடத்துவோம். மத்திய அரசின் நோக்கம் குறித்து கேள்வியெழுப்ப யாருக்கும் உரிமை கிடையாது என்றார் அவர்.
அப்போது, நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பான விதிகளை இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ரவிசங்கர் பிரசாத் பதிலளிக்கையில், அதுகுறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது; மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கூட்டாக இணைந்து விதிகளை இறுதி செய்யும். நீதிபதிகளை போதிய அளவுக்கு மத்திய அரசு நியமிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுவோர், மத்திய அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையைப் பார்த்தாலே, தங்களது குற்றச்சாட்டுகள் தவறு என்பதை தெரிந்து கொள்ளலாம்' என்றார்.
முத்தலாக் தடை மசோதா, தகவல் திருட்டு தொடர்பான கேள்விகளுக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலளிக்கையில், இந்திய அரசியலில் செல்வாக்குடன் திகழும் பெண் தலைவர்களான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் அரசியல் வேறுபாடுகளை மறந்து, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தர வேண்டும்; இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தியர்கள் தொடர்பான தகவல்களை ஏதேனும் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியது தெரிந்தால், அவை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய நடவடிக்கைகளை அரசு ஒருபோதும் சகித்து கொள்ளாது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com