காவிரி ஆணைய வழிகாட்டுதல்: விவாதிக்க ஆலோசனைக் கூட்டம்: கர்நாடகத்துக்கு மத்திய அரசு உறுதி

காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கர்நாடகத்துக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கர்நாடகத்துக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
புதுதில்லிக்குச் சென்றுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் ஒருசில மாற்றங்களை செய்வது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் காணப்படும் அறிவியலுக்கு எதிரான சில அம்சங்களை இருவரின் கவனத்துக்கு குமாரசாமி கொண்டுவந்துள்ளார். 
இதுகுறித்து கேட்டறிந்த மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்க கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதிஅளித்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் முதல்வர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியது:-
கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி ஆற்றுநீரை பகிர்ந்துகொள்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது. ஆனால் ஆணையத்தின் ஒருசில வழிகாட்டுதல்கள் அறிவியலுக்கு எதிரானதாக உள்ளது. அறிவியலுக்கு எதிரான வழிகாட்டுதல்கள் கர்நாடக விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.
காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள அணைகளின் நீர் இருப்பை 10 நாள்களுக்கு ஒருமுறை ஆராய்ந்து, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு மாதவாரியாக விட வேண்டிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று ஒரு வழிகாட்டுதல் உள்ளது. இது அறிவியலுக்கு எதிரானதாகும். 
தமிழகத்தில் அணைகளில் முழுமையான தண்ணீர் இருந்தபோதும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதால், கூடுதல் தண்ணீர் விரயமாகி கடலில் கலக்கும் வாய்ப்புள்ளது. 
கர்நாடக அணைகளில் மிகவும் குறைந்த அளவு தண்ணீர் இருப்பு இருக்கும்போதும், தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது. 
பேரிடர் காலத்தில் தண்ணீர் திறந்துவிட்டால், அது கர்நாடக விவசாயிகளின் நலனை வெகுவாகப் பாதிக்கும். எனவே, தண்ணீர் திறந்துவிடுவதற்கான வழிகாட்டுதல்களை தளர்த்த வேண்டும். 
மேலும் காவிரி ஆற்றுப்படுகையில் எந்தவகையான பயிர்களை பயிரிட வேண்டும் என்பதை முடிவுசெய்யும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்கியுள்ளது சரியல்ல. எந்தவகையான பயிரை பயிரிட வேண்டும் என்பதை விவசாயிகளுக்கு அறிவுறுத்தினால், அது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அமையும். 
காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் சில மாநிலங்களின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிராக அமைந்துள்ளது. விவசாயிகளின் தேவைக்கேற்ப தன் பங்கு தண்ணீரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் உரிமை கர்நாடகத்துக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தலையிடுவது சரியல்ல.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் எதிரானது அல்ல. ஆனால் அறிவியலுக்கு ஒவ்வாத ஒருசில வழிகாட்டுதல்களுக்கு எதிராக உள்ளோம். இந்த குறைகளை சரிசெய்யவேண்டுமென்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.
நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்து அரசிதழில் அறிவிக்கையை வெளியிட்டிருப்பது சரியல்ல. காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உள்ளது. எனவே, இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். 
காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக கர்நாடகம் எழுப்பியுள்ள சந்தேகங்கள் குறித்து விவாதிக்க நான்கு மாநிலங்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்றார் குமாரசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com