புல்லட் அதிவேக ரயில் நாட்டுக்கு தேவை: ரயில்வே வாரிய தலைவர்

புல்லட் ரயில் நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி கூறியுள்ளார். 

புல்லட் ரயில் நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி கூறியுள்ளார். 
மும்பை-ஆமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜப்பானின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மகாராஷ்டிர அரசும், குஜராத் அரசும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன. ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி செலவில் 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயிலுக்கான பாதை அமைக்கப்படவுள்ளது.
பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவும் கடந்த செப்டம்பரில் இதற்கான அடிக்கல்லை நாட்டினர். இதனிடையே, இந்த திட்டத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோடிக்கணக்கில் பணம் செலவாகும் இந்தத் திட்டம் தேவையா? என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும், ரயில் பாதை அமைய இருக்கும் 73 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அந்த கிராமத்தை ஒட்டிய பகுதியில் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருப்பதால், 3,000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் பல்வேறு புறநகர் ரயில் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி அந்த நகருக்கு வந்தார். அங்கு மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே ஆகிவற்றின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புல்லட் ரயில் வருகையால், ரயில்வே போக்குவரத்தில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும். எனவே, புல்லட் அதிவேக ரயில் நாட்டுக்கு மிகவும் அவசியமாகும். அதிக வேகம் கொண்ட புல்லட் ரயிலை இயக்குவதால், விமானப் போக்குவரத்துக்கு இணையான வேகத்தில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தை, வரும் 2022-ஆம் ஆண்டு டிசம்பருக்கும் முடிக்க வேண்டும். அதற்குள் புல்லட் ரயில் திட்டப் பணிகள் நிறைவடைந்து விடும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் முனையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மையம், செல்லிடப்பேசி ரீசார்ஜ் மையம், 24 மணி நேர சிறார் உதவி மையம் (1098) ஆகியவற்றை அஸ்வனி லோஹானி தொடங்கி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com