நீடிக்கும் சமூக புறக்கணிப்பு: புத்த மதத்துக்கு மாறும் எண்ணத்தில் தலித் மக்கள்

ஹரியானாவில் தொடர்ந்து சந்திக்கும் பாகுபாடு காரணமாக தலித் மக்கள் புத்த மதத்துக்கு மாறும் எண்ணத்தில் உள்ளதாக தலித் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஹரியானா ஹிசார் மாவட்டம் பாட்லா கிராமத்தில் குறிப்பிட்ட சமூக மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுகுறித்து பாட்லா தலித் சங்கார்ஷ் சமிதியின் தலைவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கக் கோரி ஹன்சியில் உள்ள தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தை முடித்து வைக்க அமைதியை நிலைநாட்டும் கமிட்டி மற்றும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார். 

இதுகுறித்து தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கூறுகையில், "இந்த கிராமத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் மக்கள் தங்களது விலங்குகளை விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வேலை வாய்ப்பை இழக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம். கடந்த 3 மாதங்களாக தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது" என்றார்.  

இதுகுறித்து அஜய் பாட்லா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் கூறுகையில், "பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி ஆணையர் இதுகுறித்து அறிக்கை தயார் செய்ய இந்த கிராமத்துக்கு வருகை தந்தார். ஆனால், அவரிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுத்து அனுப்பி வைத்தனர்" என்றார். 

தலித் ஆதரவாளர் ஜெய் பகவான் பாட்லா கூறுகையில், தலித் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் இந்த கிராமத்தில் இதுபோன்ற சூழலில் வசிக்க முடியாது. வேறு இடத்துக்கு இடம்பெயர வேண்டும். வரும் காலங்களிலும் இதுபோன்ற புறக்கணிப்பு மற்றும் நிர்வாகத்தில் தலித்தியம் எதிரான நடவடிக்கைகளை நீடித்தால் அவர்கள் புத்த மதத்துக்கு மாறிவிடுவர்" என்றார்.  

இதுகுறித்து, ஹன்சியின் டிஎஸ்பி நரேந்தர் சிங் கூறுகையில், "பாட்லாவில் அதுபோன்ற புறக்கணிப்பு எதுவும் கிடையாது" என்றார். அவர் மேலும் கூறுகையில், "பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த கிராமத்துக்கு சென்ற ஆணையர் விரைவில் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். அந்த அறிக்கையை அவர் நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com