இது ஒரு பருவ மழைக்காலம்: பேரிடர் மேலாண்மை வாரியம் சொல்வதைக் கேளுங்கள்

ஜூன் மாதம் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தீவிரமடைந்துள்ளது.
இது ஒரு பருவ மழைக்காலம்: பேரிடர் மேலாண்மை வாரியம் சொல்வதைக் கேளுங்கள்


ஜூன் மாதம் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தீவிரமடைந்துள்ளது.

தென் மேற்குப் பருவ மழையால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை இல்லாவிட்டாலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் பகுதிகளில் கன மழை பெய்து அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

அடுத்து வடகிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கும் போதுதான் தமிழகத்தில் சென்னை உட்பட பரவலாக மழை பெய்யும்.

மழை பெய்தால் பரவாயில்லை. சில பகுதிகளில் மழையோடு நிற்காமல் அதன் நெருங்கிய நண்பர் வெள்ளத்தையும் அல்லவா அழைத்து வந்துவிடும். அப்போதுதான் மக்களின் நிலைமை திண்டாட்டமாகிவிடுகிறது.

எனவே தீவிரமான பருவ மழைக் காலம் தொடங்கும் முன்பே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு நாளிதழ்களில் ஒரு முன்னெச்சரிக்கை விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

அதில் வெள்ளம் வருவதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளத்தில் இருந்து தப்புவது, பிந்தைய நடவடிக்கை, வெளியேறும் வழிகள் என அனைத்து விஷயங்கள் குறித்தும் அறிவுறுத்தியுள்ளது.

அவற்றைப் பார்க்கலாம்.

வெள்ளம் வரும் முன் . .

வெள்ளம் வரப்போகிறது என்று உங்களுக்கு தகவல் கிடைத்தால், அது தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வழியாக உறுதி செய்து கொள்ளுங்கள்.

வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் மூலம் உண்மையான நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

புரளிகளை புறந்தள்ளுங்கள். அமைதியாக இருங்கள். அச்சம் கொள்ளாதீர்கள்.

உங்கள் செல்போன்களுக்கு சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். எஸ்எம்எஸ் அனுப்ப வழி வகை செய்து கொள்ளுங்கள்.

வீட்டில் விலங்குகள் இருந்தால் அவற்றின் பாதுகாப்புக்கான நடவடிக்கையை எடுங்கள்.

ஒரு வேளை வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிடும் என்றால்..

மிக அத்தியாவசியமான பொருட்களை எடுத்து ஒரு பையில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உயிர்வாழத் தேவையான அனைத்துப் பொருட்களும் அதில் இருக்கட்டும்.

முதலுதவிப் பெட்டி, காய்ச்சல், பூச்சிக்கடிகள் போன்றவற்றுக்கான மருந்துகளை வாங்கி பத்திரப்படுத்துங்கள்.

பத்திரம், சான்றிதழ், முக்கிய ஆவணங்களை தண்ணீர் நுழையாத பைகளில் போட்டு வீட்டில் உள்ள உயர்ந்த அலமாரிகளில் வையுங்கள்.

வெள்ளத்தின் போது...
வெள்ள நீரில் இறங்காதீர்கள். ஒருவேளை இறங்கியே ஆக வேண்டும் என்றால் அதற்கான பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள்.

கழிவுநீர்க் கால்வாய், பாதாள சாக்கடைகளுக்கான துளைகள் போன்றவற்றில் இருந்து விலகி இருங்கள்.

மின் கம்பங்கள், மின் ஒயர்கள் விழுந்திருந்தால் அதனருகே செல்ல வேண்டாம்.

அப்போது சமைக்கப்பட்ட அல்லது உலர்ந்த பழங்கள் போன்றவற்றை மட்டும் உண்ணுங்கள். உணவுப் பொருட்களை பத்திரமாக வைத்திருங்கள்.

சுத்திகரிக்கப்பட்ட அல்லது கொதிக்க வைத்த குடிநீரை அருந்துங்கள்.

இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருங்கள். தொற்றுநோய்கள் தொடர்பாக அறிந்து எச்சரிக்கையாக இருங்கள்.
 

வெள்ளம் வடிந்த பிறகு. . 

தேங்கியிருக்கும் வெள்ள நீரில் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள்.

வெள்ளத்தில் சிக்கிய மின் சாதனப் பொருட்களை பழுதுபார்க்காமல் பயன்படுத்தாதீர்கள்.

வெள்ளத்தில் பழுதான மின் கம்பங்கள், மின்சார கம்பிகளை கவனித்து அது பற்றி புகார் அளியுங்கள்.

வெள்ள நீரைப் பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவுகளை உண்ணாதீர்கள்.

மலேரியா போன்ற நோய்களில் இருந்து காக்க கொசு வலைகளைப் பயன்படுத்துங்கள்.

கழிவு நீர் கலந்த குழாய்களில் இருந்து வரும் நீரைப் பயன்படுத்தாதீர்கள்.

வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் போது..

வெள்ளத்தில் சிக்கிய வீட்டுக்குள் இருக்கும் போது, கட்டில் மீது டேபிள் போன்ற நாற்காலிகளைப் போட்டு உயரமான இடத்தில் பத்திரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

வெள்ளம் வீட்டுக்குள் வரும் போது, மணல் மூட்டைகளைக் கட்டி கழிவறையில் இருக்கும் பவுல்களில் போட்டு வைத்தால், வெள்ள நீரில் கழிவு நீர் கலக்காமல் தவிர்க்கலாம். நீங்கள் வெள்ளத்தில் சிக்கிய வீட்டில் இருக்கும் போது இது மிக அவசியம்.

மின்சார இணைப்பைத் துண்டித்து விடுங்கள். காஸ் இணைப்பையும் மூடி வையுங்கள்.

வீட்டின் மாடி அல்லது வீட்டில் இருக்கும் பரண் போன்ற பெரிய அலமாரிகளில் தஞ்சமடையலாம்.

எங்கு சென்றாலும், உங்களுக்குத் தேவையான பொருட்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆழமான பகுதிகளுக்குச் செல்லாதீர்கள். வெள்ளத்தில் இறங்குவதாக இருந்தால் நீண்ட கொம்புகளை வைத்து ஆழம் பாருங்கள்.

துணியை கொடி போல அசைப்பது, பொருட்களை தட்டி சத்தம் எழுப்புவது போன்றவற்றை செய்து உதவிக்கு அழைக்கலாம்.

வெள்ளம் புகுந்த பகுதிகளில் வெள்ளம் வடிந்த பிறகே வீட்டுக்கு திரும்ப வேண்டும்.

மேற்கண்ட விஷயங்களை எல்லாம் மழை பெய்து, வெள்ளம் வந்த பிறகு சொன்னால் எத்தனை பேரால் படிக்க முடியும், பின்பற்ற முடியும். எனவே மழை வரும் முன்பே பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த தகவல்களை அளித்துள்ளது பாராட்டத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com