வளர்ச்சி நோக்கில் உறவை பலப்படுத்த இந்தியா - பிரான்ஸ் முடிவு

அறிவியல் - தொழில்நுட்பம், மாசற்ற எரிசக்தி, உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த பலமான கூட்டுறவை இந்தியாவும், பிரான்ஸும் கட்டமைத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா

அறிவியல் - தொழில்நுட்பம், மாசற்ற எரிசக்தி, உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த பலமான கூட்டுறவை இந்தியாவும், பிரான்ஸும் கட்டமைத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இத்தாலி, பிரான்ஸ், லக்ஸம்பர்க், பிரஸ்ஸல்ஸ் ஆகிய நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், கடந்த திங்கள்கிழமை அன்று இத்தாலியின் ரோம் நகரில் இருந்து பாரீஸ் வந்தடைந்தார்.
பாரீஸில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து, சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இமானுவேல் மேக்ரான் கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்து சென்றதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவருடன் சுஷ்மா ஆலோசித்தார்.
இதேபோன்று, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் யு வேஸ் லீ டிரெய்ன்-ஐ சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து சுஷ்மா ஸ்வராஜ் விவாதித்தார் என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூட்டு ஒத்துழைப்பினால் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரு தரப்பு வர்த்தகம் 9.85 பில்லியன் யூரோவாக இருந்தது. இந்நிலையில், 15 பில்லியன் யூரோ அளவுக்கு வர்த்தகத்தை மேம்படுத்த நாம் இன்னும் கூடுதலாக செயல்பட வேண்டியுள்ளது என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்'' என்று ரவீஷ் குமாரின் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ் இதுதொடர்பாக மேலும் கூறுகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகிய இரு சந்தர்ப்பங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் வந்ததாலும், பிரான்ஸ் அதிபர் இந்தியா வந்ததாலும் இருநாட்டு உத்திசார் ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இந்தியா - பிரான்ஸ் இடையே உத்திசார் நட்புறவு ஏற்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com