யோகா தின நிகழ்ச்சியைத் தவிர்த்தார் நிதீஷ் குமார் 

பாட்னாவில் நடைபெற்ற யோகா தின சிறப்பு நிகழ்ச்சியை மாநில முதல்வர் நிதீஷ் குமார் தவிர்த்தார். 
யோகா தின நிகழ்ச்சியைத் தவிர்த்தார் நிதீஷ் குமார் 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்றற யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் மாநில முதல்வா் நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை. 

அதே நேரத்தில் பிகார் ஆளுநர் சத்யபால் மாலிக், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பலர் கூட்டு யோகா பயிற்சியில் பங்கேற்றனா். 

பிகாரில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடா்பாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், யோகா நிகழ்ச்சியை நிதீஷ் தவிர்த்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக அனுசரிக்க ஐ.நா. முடிவு செய்ததில் பிரதமர் மோடி முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரம் விளையாட்டு வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி, வியாழக்கிழமை காலை யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனா். 

மாநில அரசு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிதீஷ் பங்கேற்காதது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறுகையில், 

"சா்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுவதற்கு முன்பிருந்தே நிதீஷ் குமார் தினமும் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். யோகா என்பது நமது நாட்டின் பாரம்பரியத்தில் ஒரு பகுதி. அது எந்தக் கட்சியின் அங்கமும் கிடையாது. யோகா தின நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் பங்கேற்காதது அவரது தனிப்பட்ட முடிவு. இதில் அரசியல் காரணம் தேடுவது தவறானது" என்றார். 

இது தொடா்பாக மத்திய அமைச்சா் ரவி சங்கா் பிரசாத், துணை முதல்வா் சுஷில் குமார் மோடி ஆகியோரிடம் செய்தியாளா்கள் கருத்துக் கேட்டபோது, 

"இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை. யோகாவின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள நிதீஷ், அதனை தினமும் பயிற்சி செய்து வருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். பல பாஜக தலைவா்களும் கூட யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை" என்று பதிலளித்தனா்.

ஆா்ஜேடி குற்றச்சாட்டு

இது தொடா்பாக லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தேசிய துணைத் தலைவா் சிவானந்த் திவாரி செய்தியாளா்களிடம் பேசுகையில், "ஒரு கூட்டணியில் இருந்து விலகும்போது நிதீஷ் குமார் இதுபோன்று கூட்டணிக் கட்சித் தலைவா்களின் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது வழக்கமான ஒன்றுதான். பாஜகவில் இருந்து விலகும் எண்ணத்தில் இருக்கும் அவர், அடுத்து மதவாதம் குறித்துப் பேசுவார். எங்கள் கூட்டணியில் நிதீஷுக்கும் இனி இடம் தர மாட்டோம். அவா் இனி வேறு யாருடன் கூட்டணி சேர்வார் என்று தெரியவில்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com