இந்திய பண்பாட்டை பிரதிபலிப்பவரே பொருளாதார ஆலோசகராக வர வேண்டும்

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பதவி விலகியுள்ள நிலையில், இந்திய பண்பாட்டை

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பதவி விலகியுள்ள நிலையில், இந்திய பண்பாட்டை பிரதிபலிப்பவரே அடுத்து அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உணர்வுகளை அரவிந்த் சுப்பிரமணியன் உணரவில்லை என்றும், விவசாயிகளை அவர் புறக்கணித்தார் என்றும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வினி மஹாஜன் கூறியதாவது:
அரவிந்த் சுப்பிரமணியத்திடம் இந்தியாவைப் பற்றிய புரிதல் இல்லை. வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்த எண்ணம் மட்டுமே அவரிடம் நிறைந்திருந்தது. நமது பொருளாதாரத்தின் முக்கிய அங்கமான விவசாயத்தையும், விவசாயிகளையும் அவர் புறக்கணித்துவிட்டார்.
நீதி ஆயோக் குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த் பனகரியாவைப் போலவே, வாஷிங்டன் நலன் குறித்து பேசுபவராக சுப்பிரமணியன் இருந்தார். அவரது நோக்கம் மற்றும் செயல் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆகவே, இந்திய பண்பாடு, நாட்டின் மதிப்பு, நமது மக்கள் ஆகியோரை பிரதிபலிக்கும் ஒருவரே நமக்கு தேவை. அதுபோன்ற நபரையே அடுத்த பொருளாதார ஆலோசகராக அரசு நியமிக்க வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, சுட்டுரையில் அஷ்வினி மஹாஜன் வெளியிட்ட பதிவில், இந்திய தொழில் துறையினர், பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது நம்பிக்கை கொண்ட ஒருவரை பொருளாதார ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com