காஷ்மீர் விவகாரத்தில் 3ஆவது நாடு தலையிடக் கூடாது: அமெரிக்கா

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் 3ஆவது நாடு தலையிடக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் 3ஆவது நாடு தலையிடக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான சீனத் தூதர் லோ சாங்குயி பேசியபோது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா-சீனா-பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் அங்கம் வகிப்பதை சுட்டிக்காட்டி, இந்த அமைப்பின்கீழ் 3 நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரித்து கொள்ள வேண்டும்; அப்படி செய்வது, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான விவகாரங்களுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும் என்றார்.
இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக ஏற்கெனவே மறுத்து விட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் 3ஆவது நாடு தலையிடக் கூடாது என்று அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை; காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது' என்றார்.
ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அண்மையில் வெளியிட்ட அறிக்கை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
சீனா திடீர் பல்டி: இதனிடையே, சீனத் தூதர் தெரிவித்த கருத்து குறித்து அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் சீனாவின் அண்டை நாடுகள்; இரு நாடுகளும் சீனாவின் நட்பு நாடுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே நீண்டகாலமாக பிரச்னை நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தியா இதை இதுவரை ஏற்கவில்லை.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்துக்கு இந்தியா-சீனா-பாகிஸ்தான் இணைந்து தீர்வு காணலாம் என்று சீனத் தூதர் லோ சாங்குயி தெரிவித்த யோசனையை நிராகரிக்கும் வகையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com