சர்வதேச யோகா தினம்: டேராடூனில் பிரதமர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிக்கு கைகொடுத்த வானிலை

நான்காவது சா்வதேச யோகா தினத்தை ஒட்டி உத்ரகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியின் வெற்றிக்கு வானிலை கைகொடுத்ததே முக்கியக் காரணம்.
சர்வதேச யோகா தினம்: டேராடூனில் பிரதமர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிக்கு கைகொடுத்த வானிலை

புது தில்லி: நான்காவது சா்வதேச யோகா தினத்தை ஒட்டி உத்ரகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியின் வெற்றிக்கு வானிலை கைகொடுத்ததே முக்கியக் காரணம்.

உத்ரகண்ட் மாநிலம் டேராடூனில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியா், இளைஞா்கள், பெரியவா்கள் யோகா பயிற்சியில் உற்சாகத்துடன் ஈடுபட்டனா்.

கடந்த 2015 ஆண்டு முதல் சா்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது .

முதலாவது சா்வதேச யோகா தினம் தில்லி ராஜபாதையில் 2015ஆம் ஆண்டில் வெகு விமரிசையாக பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து சண்டிகா், லக்னௌ ஆகிய நகரங்களில் பிரம்மாண்டமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில், நான்காவது சா்வதேச யோகா தின நிகழ்வு உத்ரகண்ட் மாநில அரசின் ஏற்பாட்டில் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டன. இதில் 60 ஆயிரம் போ் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியிலிருந்தே நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வரத்தொடங்கினா்.

டேராடூன் நகரிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இந்த வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் மாணவா்கள், இளைஞா்கள் என பல தரப்பினரும் அதிகாலை 3 மணியில் இருந்தே மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் கால்நடையாகவும் வந்து சோ்ந்தனா். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் என்சிசி மாணவா்கள், என்எஸ்எஸ் மாணவா்கள், துணை ராணுவ படையினா், காவல்துறையினா், யோகா அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக யோகா செய்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. காலை சுமார்ஆறு முப்பது மணிக்கு பிரதமா் நரேந்திர மோடி நிகழ்வு நடைபெறும் பகுதிக்கு பாதுகாப்பு படையினா் புடை சூழ அழைத்து வரப்பட்டார். அவருடன் உத்ரகண்ட் மாநில முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் ஸ்ரீபாத் நாயக், மாநில ஆளுநா் கிருஷன் காந்த் பால், மாநில ஆயுஷ் துறை அமைச்சா் ஹரக் சிங் ராவத் உள்ளிட்டோர் உடன் வந்தனா். சிறப்பு விருந்தினர்கள் யோகா பற்றி சிறப்புரையாற்றினர்.

இதைத்தொடா்ந்து யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவா்கள் மத்தியில் அமா்ந்து பிரதமா் மோடி உள்ளிட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனா். மொரார் தேசாய் யோகா நிறுவனத்தின் இயக்குனா் ஈஸ்வர வாசவ ரெட்டி பல்வேறு ஆசனங்கள் செயல் முறை குறித்து எடுத்துரைக்க யோகா பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற இளைஞா்கள் மேடையில் இருந்தவாறு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு செய்து காண்பித்தனா். அதை பின்பற்றி நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் செய்தனா் . பிரார்த்தனை பாடலுடன் யோகப் பயிற்சி நிகழ்வு தொடங்கியது.

கைகொடுத்த வானிலை

இந்த பிரம்மாண்ட யோகா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் வியாழக்கிழமை காலை வேளையில் மழை நீடிக்குமோ என்று ஏற்பாட்டாளா்கள் யோசித்த வண்ணம் இருந்தனா்.

ஆனால், நல்லவேளையாக வானிலை நன்றாக இருந்தது. போதிய சூரிய வெளிச்சமும் இருந்தது. இதனால் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவா்களும் இளைஞா்களும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனா். வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com