பாஜக - பிடிபி கூட்டணி முறிந்தது ஏன்?: அமித் ஷா விளக்கம்

ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடனான (பிடிபி) கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை, 2019 மக்களவைத் தேர்தலை மனதில்கொண்டு எடுக்கவில்லை'
பாஜக - பிடிபி கூட்டணி முறிந்தது ஏன்?: அமித் ஷா விளக்கம்

ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடனான (பிடிபி) கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை, 2019 மக்களவைத் தேர்தலை மனதில்கொண்டு எடுக்கவில்லை' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் பிடிபி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, பாஜக செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது. 
இதையடுத்து, அந்த மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேச நலன்களை கருத்தில் கொண்டே பிடிபி கூட்டணியில் இருந்து வெளியேறியதாக பாஜக தெரிவித்தாலும், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே பாஜக இந்த முடிவை எடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன. 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முதல் முறையாக புதன்கிழமை கருத்து தெரிவித்தார். தில்லியில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இதுகுறித்து கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறும் முடிவை, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு எடுக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால், இன்னும் 6 மாதங்கள் கழித்து அந்த முடிவை எடுத்திருப்போம்.
ஜம்மு, காஷ்மீர், லடாக் என 3 பிராந்தியங்களிலும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், மாநில அரசுக்கு நெருக்கடி அளித்து வந்த சில குழுக்கள், அந்த முயற்சிகளை தடுத்துவிட்டன. காஷ்மீர் பண்டிட்டுகளை மறு குடியமர்த்தும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பல்வேறு விவகாரங்களிலும் இதே நிலை நிலவியது. அத்துடன், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையும் சீர்குலைந்துவிட்டது. எனவே, எத்தனை காலத்துக்குதான் அமைதியாக காத்திருக்க முடியும்?
கடந்த 2015-ஆம் ஆண்டில் மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்காக பிடிபியுடன் பாஜக கைகோத்தபோது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்போது பிடிபி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கும் முடிவை பாஜக எடுத்திருப்பதாலும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வளர்ச்சி அரசியலை முன்வைத்தே பிடிபி கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைத்தோம். எனினும், காஷ்மீர் தொடர்பான கொள்கையை, பாஜக எப்போதுமே மாற்றிக் கொண்டதில்லை என்றார் அவர். 
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் கூறியதாவது:
தேச நலன்களைவிட உள்ளூர் அரசியல் ஆதாயங்களே அவர்களுக்கு (மக்கள் ஜனநாயக கட்சி) முக்கியமாக தெரிந்தது. அவர்களுடன் இணைந்து, மாநில நலனுக்காக பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள முயன்றோம். 
பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தும் முடிவை பிரதமரும் உள்துறை அமைச்சரும் மேற்கொண்டனர். 
ஆனால், காவல்துறையினரும் அப்பாவி பொது மக்களும் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com