ரூ.2,000 கோடி முறைகேடு வழக்கு: பாங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமைச் செயல் அதிகாரி கைது

ரூ.2,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான ரவீந்திர மராத்தே

ரூ.2,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான ரவீந்திர மராத்தே, அவருக்கு முன்பு இப்பொறுப்பை வகித்த சுஷில் முனோத் ஆகியோர் புணே காவல் துறையின் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் மராத்தேவும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முனோத்தும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தவிர வங்கியின் செயல் இயக்குநர் ராஜேந்திர குப்தா, வங்கியின் பிராந்திய மேலாளர் நித்யானந்த் தேஷ்பாண்டே, டி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தின் சில அதிகாரிகள், ஆடிட்டர் உள்ளிட்டோரும் கைதாகியுள்ளனர்.
இவர்கள் அனைவரது மீதும் குற்றச்சதி, ஏமாற்றுதல், ஊழலில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தின் தலைவர் குல்கர்னி உள்ளிட்டோருடன் இணைந்து வங்கிப் பணம் ரூ.2,000 கோடியை முறைகேடு செய்தனர் என்பது அவர்கள் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும். இதில் பெரும் தொகை கடன் பெற்று முறைகேடு செய்யப்பட்டதாகும்.
இதில், கட்டுமான நிறுவனத்தின் தலைவர் குல்கர்னி, அவரது மனைவி ஹேமாவதி ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு புணே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குல்கர்னியின் மகன் சிரீஷ், அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களும் இந்த வழக்கில் ஏற்கெனவே கைதாகியுள்ளனர்.
இந்த முறைகேடு கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. புணேயைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் விஜய் கும்பார் என்பவர், குல்கர்னியின் கட்டுமான நிறுவனத்துக்கு பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி எந்தவகையில் எவ்வளவு கடன் அளித்துள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்களை கேட்டு பெற்றார். அப்போது, போதிய ஆவணங்கள் ஏதுமின்றி குல்கர்னியின் நிறுவனத்துக்கு ரூ.2,043 கோடி கடன் அளிக்கப்பட்டது தெரியவந்தது.
தங்கள் நிறுவனத்தில் வீடு வாங்க முன்பதிவு செய்த 12,000 பேரின் பணத்தையும், நிரந்தர வைப்பு செய்த 8,000 மூத்த குடிமக்களின் நிதியையும் குல்கர்னி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com