ஆதார் விவரங்களை போலீஸாரும் கையாள அனுமதி: மத்திய அரசு பரிசீலனை

குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக ஆதார் விவரங்களை போலீஸாருக்கு அளிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்க உள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர்

குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக ஆதார் விவரங்களை போலீஸாருக்கு அளிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்க உள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இந்திய கைவிரல் ரேகைப் பதிவு அமைப்பின் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேசிய குற்றப் பதிவு வாரிய இயக்குநர் இஷ் குமார் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதுதொடர்பாக அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் ஆண்டொன்றுக்கு சராசரியாக 50 லட்சம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான வழக்குகளில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதில் கால தாமதம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் குற்றவாளிகளில் 85 சதவீதம் பேர் முதன்முறையாக அத்தகைய சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களது கைரேகைப் பதிவுகளோ அல்லது வேறு தகவல்களோ போலீஸாரிடம் இல்லாததால் தடயங்களைச் சேகரித்தாலும் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முடிவதில்லை.
அதேபோன்று ஆண்டொன்று 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் கைப்பற்றப்படுகின்றன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இவற்றுக்குத் தீர்வு காண வேண்டுமானால், ஆதார் தகவல்களை போலீஸாரும் கையாளுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். அந்த விவரங்களை காவல் துறையுடன் பகிர்ந்து கொண்டால் மட்டுமே குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க முடியும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து கருத்தரங்கில் பேசிய ஹன்ஸ்ராஜ் ஆஹிர், ஆதார் தொடர்பான கோரிக்கையை பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, அடையாளம் தெரியாத சடலங்கள், குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள், சந்தேகத்துக்குரிய நபர்கள் ஆகியோரது மரபணு மாதிரிகளை சேகரித்து வைத்து பாதுகாக்க தேசிய மற்றும் மாநில அளவில் சிறப்பு வங்கிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com