ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை முடக்க முயற்சிகள் நடக்கிறது: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்குத் தொடர்பான விசாரணையை முடக்க முயற்சிகள் நடப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை முடக்க முயற்சிகள் நடக்கிறது: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்குத் தொடர்பான விசாரணையை முடக்க முயற்சிகள் நடப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு அமலாக்கத் துறை இணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங்கை உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு நியமித்தது. இந்நிலையில், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராஜ்னீஷ் கபூர் என்பவர் அண்மையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜேஷ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாகவும், இதுகுறித்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், ராஜ்னீஷ் கபூருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ்வர் சிங் கிரிமினல் அவதூறு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
எனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பொது நல மனுவில் புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆவணமோ, ஆதாரங்களோ தாக்கல் செய்யப்படவில்லை.
ஏற்கெனவே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் என்மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், சிபிஐ ஆகிய அமைப்புகள், என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று தெரிவித்து விட்டன.
இதையடுத்து, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு யாரும் தடையை ஏற்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், என் மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்தவருக்கு எதிராக கண்டன நோட்டீஸையும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு மற்றும் அதுதொடர்பான பிற வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது முதல் எனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட உத்தரவில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் எனத் தெரிவித்தது. இதையடுத்தே, என் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து, மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஆகியவை தொடர்பான விசாரணையை தாமதம் செய்யவும், குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கு விசாரணை முடியாமல் தடுக்கவும் சில சுயநல சக்திகள் விரும்புகின்றன. அந்த சக்திகளின் தூண்டுதலின் பேரிலேயே என் மீது அவர் (கபூர்) மனு தாக்கல் செய்துள்ளார் என்று அந்த மனுவில் ராஜேஷ்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ராஜேஷ்வர் சிங்குக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் பொது நல மனுவில், ராஜேஷ்வருக்கு சாதகமாக வாதிட தன்னை அனுமதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நாஸர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் வேறோர் அமர்வு முன்பு வரும் 25ஆம் தேதியன்று அந்த மனுவை தாக்கல் செய்யுமாறு சுப்பிரமணியன் சுவாமியை கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, அந்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து இந்து மல்ஹோத்ரா விலகுவதாக திடீரென அறிவித்தார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்குத் தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை அண்மையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. மேலும், கார்த்தி சிதம்பரத்திடம் இருமுறை அமலாக்கத் துறை விசாரணையையும் நடத்தியது. அதேபோல், ப. சிதம்பரத்தின் வாக்குமூலத்தையும் அமலாக்கத் துறை பதிவு செய்தது. மத்திய நிதியமைச்சக அதிகாரிகள், அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய அதிகாரிகள் ஆகியோரிடமும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com