நீதிபதி செலமேஸ்வர் இன்றுடன் ஓய்வு: ஜோசப் பதவி உயர்வு தாமதமாக வாய்ப்பு

நீதிபதி செலமேஸ்வர் இன்றுடன் ஓய்வு: ஜோசப் பதவி உயர்வு தாமதமாக வாய்ப்பு

உச்ச நீதிமன்ற நீதிபதியும், கொலீஜியம்' குழு உறுப்பினருமான செலமேஸ்வர் வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 22) ஓய்வு பெற உள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியும், கொலீஜியம்' குழு உறுப்பினருமான செலமேஸ்வர் வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 22) ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து அக்குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டியுள்ளதால் நீதிபதி கே.எம்.ஜோசப்பின் பதவி உயர்வு விவகாரம் மேலும் தாமதமாக வாய்ப்புள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் புதிதாக நியமிக்கப்பட வேண்டிய நீதிபதிகளின் பெயர்களை கொலீஜியம்' பரிந்துரைக்கும். அவை, மத்திய அரசு மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இறுதி செய்யப்படும்.
அந்த அடிப்படையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம்' குழு அண்மையில் சில பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது. மூத்த பெண் வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என அதில் பரிந்துரைத்திருந்தது.
அதில் இந்து மல்ஹோத்ராவுக்கு இசைவு தெரிவித்த மத்திய அரசு, ஜோசப் தொடர்பான பரிந்துரையை மட்டும் நிராகரித்தது. இத்தகைய பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் கொலீஜியம் குழுவிடம் அரசு தெரிவித்தது. இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
குறிப்பாக, உத்தரகண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய கொலீஜியம்' குழு அண்மையில் கூடி விவாதித்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற அக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் ஜோசப்புக்கு பதவி உயர்வு வழங்க மீண்டும் பரிந்துரைப்பது என அனைத்து நீதிபதிகளும் ஒருமனதாக முடிவெடுத்தனர்.
புதிய நீதிபதிகள் பதவி உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளிக்கும்போது, ஜோசப்பின் பெயரும் சேர்த்து அனுப்பப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், செலமேஸ்வர் வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற இருப்பதால், அவருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரி கொலீஜியம்' குழுவில் புதிய உறுப்பிராக இணைய உள்ளார். இதன் காரணமாக நீதிபதி ஜோசப் விவகாரம் குறித்து மீண்டும் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜோசப்பின் பதவி உயர்வு மேலும் தாமதமாகலாம் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com