புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என சென்னையில் சர்வதேச இயந்திர கண்காட்சியை தொடங்கி வைத்து மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். 
அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கிய சர்வதேச இயந்திர கண்காட்சியில் வெளியிடப்பட்ட மலருடன் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு
அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கிய சர்வதேச இயந்திர கண்காட்சியில் வெளியிடப்பட்ட மலருடன் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என சென்னையில் சர்வதேச இயந்திர கண்காட்சியை தொடங்கி வைத்து மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். 
அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (அய்மா') சார்பில் அக்மி 2018' என்ற பெயரிலான 13-ஆவது சர்வதேச மிஷின் டூல்ஸ்' ஐந்து நாள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தொடங்கி வைத்துப் பேசியது: 
இந்தியாவின் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதுவரை இரு முறை மட்டுமே தொழில் கொள்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் கொள்கை மூலம் தொழில் துறை நவீன மயமாக்குதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதே நோக்கம்.
கடந்த 1963-ஆம் ஆண்டே ஒரு தொழிற்பேட்டையை அமைக்க வேண்டும் என்ற சிந்தனை மூலம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் காமராஜர். இந்தியாவில் தொழில் வளர்ச்சி பெருக வேண்டும் என்றால் கிராமப்புறங்களில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். 
எனவேதான் ஒரு மாநிலத்துக்கு 6 மாவட்டம் என்ற அடிப்படையில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும் அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. 
தொழில்துறையை வெற்றிகரமாக மாற்ற வேண்டுமானால், சர்வதேச சந்தை வருவது தவிர்க்க முடியாததாகும். இந்த வகையில் முதல் முறையாக, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க மத்திய அரசு தொழில்நிறுவனங்களுடன் இணைந்து செயல்முறைகளை வகுத்து வருகிறது. 
வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக நான் அயல்நாடு செல்லும் போது தமிழக பிரதிநிதிகளும் வர வேண்டும் என தமிழக அமைச்சரிடத்தில் தெரிவித்துள்ளேன். தமிழ்நாடு தொழில்வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. தொழில்துறைக்கு மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அளித்துள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும் என்றார். 
இளைஞர்களுக்கு உதவி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
தமிழகம் தொழிற்சாலை வளர்ச்சியில் சிறந்து விளங்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனிகவனம் செலுத்தினார். அதற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார். தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தொழில்களில் நவீன தொழில்நுட்ப உத்திகள், இயந்திரங்களைப் பயன்படுத்த இதுபோன்ற கண்காட்சிகள் பெரிதும் உதவும் என்றார். 
அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பி.பென்ஜமின், நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏ., பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.ரவி, பொதுச் செயலாளர் ஆர்.ராம்சந்தர், கண்காட்சியின் தலைவர் கே.ஐயப்பன், ஏற்பாட்டாளர் ஆர்.எஸ்.எஸ். சதீஷ்பாபு, ஷங்க் இன்டெக் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ் சதாசிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
28 நாடுகள்- 445 அரங்குகள்: அக்மி 2018' சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியில் இந்தியா, கனடா, ஜப்பான், டென்மார்க் உள்ளிட்ட 28 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் சார்பில் 445 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆட்டோமொபைல், ரயில்வே, கப்பல், ராணுவம் என பல்வேறு துறை சார்ந்த நவீன இயந்திரங்கள், கருவிகள், தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. வரும் திங்கள்கிழமை (ஜூன் 25) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com