அகஸ்தா வெஸ்ட்லேண்ட் வழக்கு: இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு

அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் இடைத்தரகராகக் கருதப்படும் கார்லோ ஜெரோசாவை (71), இந்தியாவிடம் ஒப்படைக்க இத்தாலி மறுத்துவிட்டது. சட்ட விவகாரங்களில் பரஸ்பரம் உதவுவது

அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் இடைத்தரகராகக் கருதப்படும் கார்லோ ஜெரோசாவை (71), இந்தியாவிடம் ஒப்படைக்க இத்தாலி மறுத்துவிட்டது. சட்ட விவகாரங்களில் பரஸ்பரம் உதவுவது தொடர்பாக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாததால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இயலாது என இத்தாலி கூறியுள்ளது.
இது, அந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்கநரகத்துக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: சட்ட விவகாரங்களில் பரஸ்பரம் உதவும் ஒப்பந்தங்கள் இல்லாத போதிலும் சில விதிகளின் கீழ் கார்லோ ஜெரோசாவை பிடித்து இந்தியாவிடம் வழங்க இத்தாலியால் இயலும் என்று கூறி வெளியுறவு அமைச்சகத்தை சிபிஐ நாடியுள்ளது.
இத்தாலிய மற்றும் ஸ்விட்சர்லாந்து குடியரிமை கொண்ட கார்லோ வாலன்டினோ ஃபெர்டினான்டோ ஜெரோசா என்ற அந்த நபர், அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படுகிறார். 
கார்லோவும்- இந்திய விமானப் படையின் முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகியின் உறவினர்களும் சந்தித்ததைத் தொடர்ந்தே விவிஐபி-க்களுக்கான ஹெலிகாப்டர்களின் வசதிகளில் மாற்றங்கள் செய்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின.
அகஸ்தா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் விவிஐபி-க்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கிய விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்லோவுக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பித்திருந்த நிலையில், அவர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
இந்த வழக்கில் இடைத்தரகர்களாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று நபர்களில் கார்லோவும் ஒருவர் என்பதால், அவரிடம் விசாரணை நடத்த வேண்டியது சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்துக்கு அவசியமானதாகும். இந்நிலையில், அவரை ஒப்படைக்க இத்தாலி மறுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com