அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோத குடியேற்றம்: சமீப காலங்களில் 100 பேர் கைது

அண்மைக்காலங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சுமார் 100 நபர்களை அந்நாட்டு அரசு சிறைபிடித்து வைத்துள்ளது.

அண்மைக்காலங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சுமார் 100 நபர்களை அந்நாட்டு அரசு சிறைபிடித்து வைத்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதுடன், சூழ்நிலை என்ன என்பதை இந்திய தூதரகம் கண்காணித்து வருகிறது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் உள்ள தடுப்புக் காவல் மையத்தில் சுமார் 40 முதல் 45 இந்தியர்கள் வரை உள்ளனர். இதேபோன்று, ஓரேகான் மையத்தில் 52 இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆவர்.
இந்த இரண்டு தடுப்புக் காவல் மையத்துடனும், அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் தற்போது தொடர்பு கொண்டுள்ளது. 
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஓரேகான் மையத்துக்கு தூதரக அதிகாரி சென்று பார்வையிட்டுள்ளார். நியூ மெக்சிக்கோ மையத்துக்கு இந்திய தூதரக அதிகாரி சென்று பார்வையிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிலைமையை இந்திய தூதரகம் கண்காணித்து வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கலில் மாட்டியுள்ள இந்தியர்களில் 12-க்கும் அதிகமானோர், நியூ மெக்சிக்கோ மையத்தில் பல மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இந்தியர்கள் அனைவரும் ஒரு வாரத்துக்கு முன்னதாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இந்தியாவில், வன்முறை மற்றும் துன்புறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டதால் அடைக்கலம் தேடி வந்ததாக, சிறைபிடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
சிறையில் வாடும் இந்தியர்கள்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக பஞ்சாபியர்கள் அதிகளவில் சிறையில் இருப்பதாக வட அமெரிக்க பஞ்சாபி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல் அடிப்படையில், கடந்த 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் 27,000 இந்தியர்கள் அந்நாட்டு எல்லையில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 4,000 பெண்களும், 350 குழந்தைகளும் அடங்குவர்.
இவர்களில் பெரும்பாலான நபர்கள் தற்போது வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபியர்களிடம் தலா 35 முதல் 50 லட்சம் வரை பெற்றுக் கொண்டு, அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் பஞ்சாப்பில் உள்ள ஆள் கடத்தல்காரர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக, வட அமெரிக்க பஞ்சாபி கூட்டமைப்பைச் சேர்ந்த சத்னாம் சிங் சஹல் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப்பில் அமலில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு சட்டத்தை மிக கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com