ஓய்வுபெற்றார் நீதிபதி செலமேஸ்வர்: நீதித் துறை செயல்பாடுகளை ஆய்வுக்குட்படுத்த வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே.செலமேஸ்வர் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார். மற்ற துறைகளைப் போன்று நீதித் துறையையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று அப்போது அவர்
ஓய்வுபெற்றார் நீதிபதி செலமேஸ்வர்: நீதித் துறை செயல்பாடுகளை ஆய்வுக்குட்படுத்த வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே.செலமேஸ்வர் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார். மற்ற துறைகளைப் போன்று நீதித் துறையையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நீதிபதிகள் நியமனத்தில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை நியாயமானதாக இல்லை என்று ஆதங்கம் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றச்சாட்டுகளை தாம் முன்வைத்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆந்திரத்தை பூர்விகமாகக் கொண்டவர் நீதிபதி செலமேஸ்வர். நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியம் நடைமுறைக்கு முதலில் இருந்தே அவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நீதித் துறை நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பது அவரது வாதம்.
பொதுவாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம்' குழுவே நியமித்து வருகிறது. அந்த நடைமுறைக்கு மாற்றாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. ஆனால், அந்த புதிய நடைமுறை சட்டவிரோதமானது எனக் கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. பெரும்பாலான நீதிபதிகள் அந்தத் தீர்ப்பை ஆதரித்த நிலையில், செலமேஸ்வர் மட்டும் அதற்கு அதிருப்தி தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய நீதித் துறை வரலாற்றில் முன்னெப்போதும் நேர்ந்திராக நிகழ்வாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது நீதிபதிகள் செலமேஸ்வர், மதன் பி. லோகுர், ராஜன் கோகோய், குரியன் ஜோசப் ஆகியோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து செலமேஸ்வர் கூறும் ஒவ்வொரு கருத்துகளும் தேசிய அளவில் கவனம் பெற்றன.
இத்தகைய சூழலில், உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இருந்து அவர் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார். முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தற்போது உள்ள நீதிபதிகள் நியமன நடைமுறை நியாயமானதாகவோ, வெளிப்படைத்தன்மை நிறைந்ததாகவோ இல்லை. இந்திய தேசத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளையும் கண்காணிப்புக்குட்படுத்த வேண்டும். அதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் விதிவிலக்கல்ல. அவரது செயல்பாடுகளையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்வது அவசியம். உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.
நீதித் துறையில் நடக்கும் தவறுகளைத் திருத்த முயற்சிகள் செய்து அவை பலனளிக்காதபோதுதான் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அதுதொடர்பான உண்மைகளை நாங்கள் தெரிவித்தோம். அதில் எந்தத் தவறும் இல்லை. அந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. இருப்பினும் நீதித் துறை பற்றிய விழிப்புணர்வும், புரிதலும் சமூகத்தில் உருவாகியிருக்கிறது
உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தும் விவகாரத்தில் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவது சரியான நடவடிக்கையல்ல. இத்தகைய செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நீடிக்காது என்றார் செலமேஸ்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com