காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு: அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து வெள்ளிக்கிழமை அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு: அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த குழுவில் கர்நாடகம் சார்பில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்களை அந்த மாநில அரசு பரிந்துரைக்காததால், மத்திய அரசு அந்த மாநில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடாமல் பதவியை மட்டும் குறிப்பிட்டு உறுப்பினர்களாக அறிவித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அமல்படுத்தவில்லை எனக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரி அரசுகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தீர்ப்பில் தெரிவித்தபடி வரைவு செயல் திட்டத்தை (ஸ்கீம்) மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி. சிங், நீதிமன்றத்தில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி 14 பக்க வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் யு.பி. சிங் தாக்கல் செய்தார். அதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களும் கோரின. அதைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள், பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வர வேண்டும்; இது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டனர். மேலும், தென்மேற்குப் பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பது குறித்து அரசிதழில் மத்திய அரசு வெளியிடும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை முடித்து வைத்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்குவதற்கு பதிலாக, மே 29-ம் தேதி முன்கூட்டியே தொடங்கியது. ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. இதனால், விவசாயிகள் தரப்பில் மீண்டும் அதிருப்தி ஏற்பட்டு, அடுத்தகட்டப் போராட்டம் நடத்தும் சூழல் நிலவியது.
இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிக்கை இறுதி செய்யப்பட்டு அரசிதழில் ஜூன் 1-ஆம் வெளியிட்டப்பட்டது. மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பது தொடர்பான அரசிதழ் முறைப்படி இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமலுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக தமிழக அரசின் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக நீர் வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் ஆர். செந்தில் குமார் ஆகியோரை தமிழக அரசு பரிந்துரைத்தது. இதேபோல, புதுச்சேரி, கேரள அரசுகளும் உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைத்தது. ஆனால், கர்நாடக மாநிலம் சார்பில் உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை.
இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய நீர் வளத் துறை இணைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
மேலாண்மை ஆணையம்: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன், உறுப்பினராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுதி நேர உறுப்பினர்களாக மத்திய நீர் வளத் துறையின் இணைச் செயலர், மத்திய வேளாண்மைத் துறையின் ஆணையர், மத்திய வேளாண்மை துறையின் இணைச் செயலர், கர்நாடக மாநில நீர் வளத் துறை நிர்வாகச் செயலாளர், கேரள நீர் வளத் துறை செயலர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப் பணித் துறை ஆணையரும், செயலருமான ஏ. அன்பரசு, தமிழக அரசின் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளரான ஏ.எஸ். கோயல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலராக செயல்படுவார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் செயல்படும்.
ஒழுங்காற்றுக் குழு: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார். உறுப்பினர்களாக கர்நாடக மாநில நீர் வளத் துறை தலைமைப் பொறியாளர் (பெயர் அறிவிக்கப்படவில்லை), கேரள தலைமைப் பொறியாளர் கே.ஏ. ஜோஷி, புதுச்சேரி பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம், தமிழக அரசின் நீர் வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் ஆர். செந்தில் குமார், இந்திய வானியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளர் எம். மொஹபத்ரா, சிஎஸ்ஆர்ஓவின் தலைமைப் பொறியாளர் கிருஷ்ண உண்ணி, மத்திய வேளாண்மைத் துறையின் தோட்டக்கலை ஆணையர், குழுவின் உறுப்பினர் - செயலாளராக ஏ.எஸ். கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com