ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையை கலைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மாநில சட்டப்பேரவையை கலைப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தின.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மாநில சட்டப்பேரவையை கலைப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தின.
எனினும், சட்டப்பேரவை தொடரவும், எம்எல்ஏக்கள் தொடர்ந்து பணியாற்றவும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) பரிந்துரைத்த நிலையில், பாஜக இக்கூட்டத்தில் அமைதி காத்துள்ளது. இக்கூட்டத்தில் பிடிபி கட்சி சார்பில் மெஹபூபா முஃப்தி கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக கட்சி செயலர் திலாவர் மிர் பங்கேற்றார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், மாநில நிர்வாகம் குறித்த பரிந்துரைகளை கேட்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஆளுநர் என்.என்.வோரா வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். அதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது, மாநில சட்டப்பேரவையை உடனடியாகக் கலைத்து, முன்கூட்டியே தேர்தல் நடத்தும் உகந்த சூழலை மாநிலத்தில் ஏற்படுத்த வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தின.
மாநில நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளையும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கையையும் எடுக்குமாறு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, ஆளுநரிடம் வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறுத்தைகள் கட்சியின் ஹர்ஷ் தேவ் சிங் கூறுகையில், குதிரை பேரம் நடப்பதை தடுக்கும் வகையில் உடனடியாக பேரவையை கலைக்க வலியுறுத்தினோம்' என்றார். 
மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ. மிர் கூறுகையில், மாநிலத்தில் புதிதாக தேர்தல் நடத்த காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. எனினும், சட்டப்பேரவையை கலைக்கும் முடிவு ஆளுநரைப் பொருத்ததே. பிடிபி-பாஜக கூட்டணி 3 ஆண்டுகளாக தவறாக ஆட்சி செய்து வந்தது. அரசு பணி நியமனங்கள் அனைத்தும் தகுதி அடிப்படையில் நடைபெறாததால் இளைஞர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும்' என்றார்.
ஜனநாயக தேசியவாத கட்சி தலைவர் ஜி.ஹெச்.மிர் கூறுகையில், மாநிலத்தின் சூழ்நிலையை மேம்படுத்த அனைத்து கட்சிகளிடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டுமென ஆளுநர் வலியுறுத்தினார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com