பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதே காங்கிரஸ் கொள்கை: பாஜக சாடல்

ராகுல் காந்தி தலைமையில் செயல்படும் காங்கிரஸ் கட்சி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

ராகுல் காந்தி தலைமையில் செயல்படும் காங்கிரஸ் கட்சி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை காட்டிலும், ராணுவ நடவடிக்கைகளில்தான் பொதுமக்கள் அதிகம் கொல்லப்பட்டதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் பேசியிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, காஷ்மீருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் சைபுதீன் சோஸ் பேசியிருப்பதையும் பாஜக கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சோனியா காந்தியின் ஆசியுடன், ராகுல் காந்தியின் தலைமையில் புதிய காங்கிரஸ் உருவாகியுள்ளது. இந்தியாவை உடைக்க விரும்பும் சக்திகளை பலப்படுத்த வேண்டும் என்பதே அக்கட்சியின் விருப்பம்.
ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தேசம் குறித்து காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த பார்வையில் கடல் அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குலாம் நபி ஆசாத்தின் கருத்துக்கள் பொறுப்பற்ற வகையிலும், வெட்கக்கேடான வகையிலும் உள்ளன. இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆசாத்தின் கருத்துக்கள் பக்க பலமாக அமையும்.
காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு துறை அமைச்சரும், ராணுவ தளபதியும் சென்று ஆறுதல் கூறியதை குலாம் நபி ஆசாத் நாடகம் என்கிறார். இதைவிட வெட்கக்கேடான ஒரு விஷயம் இருக்க முடியுமா?
மோடி மீது கொண்ட வெறுப்பால், ராணுவ வீரர்களுக்கான மரியாதை, அவர்களது வீரம் போன்ற விஷயங்களில் காங்கிரஸ் கட்சி சமரசம் செய்து கொண்டுள்ளது. குலாம் நபி ஆசாத் மற்றும் காஷ்மீருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று கூறிய சைபுதீன் சோஸ் ஆகியோர் மீது ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பாரா?
இந்த தலைவர்களை போன்றே ராகுல் காந்தியிடமும் நல்லது எதையும் எதிர்பார்க்க முடியாது. தேசத்துக்கு விரோதமாக குரல் எழுப்பிய ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது குறித்து கேள்வி எழுப்பியதும் இதே ராகுல் காந்திதான் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
அவர் தொடர்ந்து பேசுகையில், பாஜக ஆட்சியில் அதிக அளவிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். 
கடந்த 2012 மற்றும் 2013 முறையே 72, 67 பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்த 2014-இல் இது 110-ஆக அதிகரித்தது என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.
2015-இல் 108 பயங்கரவாதிகளும், 2016-இல் 150 பேரும், 2017-இல் 217 பேரும் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். இந்த ஆண்டு மே மாதம் வரையில் 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com