மக்கள் கண்காணிப்பதை எம்.பி.க்கள் உணர வேண்டும்: மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்

நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவதை மக்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும், தேர்தல் சமயத்தில் தக்க முடிவு எடுப்பார்கள் என்பதையும் எம்.பி.க்கள் உணர வேண்டும்
மக்கள் கண்காணிப்பதை எம்.பி.க்கள் உணர வேண்டும்: மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்

நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவதை மக்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும், தேர்தல் சமயத்தில் தக்க முடிவு எடுப்பார்கள் என்பதையும் எம்.பி.க்கள் உணர வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், இதுதொடர்பாக சுமித்ரா மகாஜன் பேசியதாவது:
எம்.பி.க்களுக்கான விதிமுறை கையேடு அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்படும்போது என் மனம் பாதிக்கப்படுவதுடன், மிகுந்த வேதனை அடைகிறேன்.
நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்திச் செல்வதில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பொறுப்பு உண்டு. ஒரு விஷயத்தை ஆலோசித்து, விவாதித்து, முடிவு எடுக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம். ஆனால், அமளிகளால் என்ன நடந்துவிடுகிறது?
மக்கள் தங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை எம்.பி.க்கள் உணர வேண்டும். மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு உரிய முடிவை எடுப்பார்கள்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களையும், நல்ல பேச்சுகளையும் புறந்தள்ளிவிட்டு, அமளி குறித்து மட்டுமே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, கண்ணியமான முறையில் நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றார் மகாஜன்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 29 அமர்வுகள் நடைபெற்றன. ஆனால், அதில் அமளி காரணமாக ஏறக்குறைய 127 மணி நேரம் வீணடிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இது ஜூலை இரண்டாவது வாரம் தொடங்குவது வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com