அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை மீண்டும் திருப்பி அனுப்பியது மத்திய அரசு

அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கு 2 வழக்குரைஞர்களின் பெயரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்திருந்ததை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது.

அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கு 2 வழக்குரைஞர்களின் பெயரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்திருந்ததை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது.
 இந்த பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியிருப்பது, இது 2ஆவது முறையாகும்.
 அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு, முகமது மன்சூர், பஷரத் அலி கான் ஆகிய 2 வழக்குரைஞர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு முன்பு பரிந்துரை செய்திருந்தது. இதில் வழக்குரைஞர் மன்சூர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜாகிர் அகமதுவின் மகன் ஆவார்.
 பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தபோது, அவர் தலைமையில் செயல்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் உறவுகளை கையாள அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவில் நீதிபதி அகமதுவும் இடம்பெற்றிருந்தார்.
 இந்த பரிந்துரை மீது, சுமார் இரண்டரை ஆண்டுகள் மத்திய அரசு முடிவெடுக்காமல் இருந்தது. இந்நிலையில், அந்தப் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் திருப்பி அனுப்பியது. அப்போது, பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கு, அவர்கள் 2 பேர் மீதும் புகார்கள் இருப்பதை மத்திய அரசு காரணமாக தெரிவித்திருந்தது.
 இருப்பினும், அவர்கள் 2 பேரின் பெயர்களையும், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு மீண்டும் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையையும் மத்திய அரசு தற்போது திருப்பி அனுப்பிவிட்டது. இதற்கு ஏற்கெனவே தெரிவித்த காரணத்தையே மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.
 இதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு வழக்குரைஞர் நாஸிர் அகமது பெய்க் பெயரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்ததையும் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
 உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பில் தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் அங்கம் வகிப்பர். அந்த 5 நீதிபதிகளில் ஒருவராக இருந்த மூத்த நீதிபதி செலமேஸ்வர் கடந்த வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக, புதிய நீதிபதி கொலீஜியத்தில் சேர்க்கப்படவுள்ளார். அதன்பிறகு, 2 வழக்குரைஞர்களை பரிந்துரை செய்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com