எல்லையில் ஆயுதக் கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பு: புள்ளிவிவரங்களில் அதிர்ச்சி தகவல்

எல்லைப் பகுதிகளில் ஆயுதங்கள், கால்நடைகள், போதைப் பொருள்கள் கடத்தல் சம்பவங்கள் கடந்த 3 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருப்பது, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

எல்லைப் பகுதிகளில் ஆயுதங்கள், கால்நடைகள், போதைப் பொருள்கள் கடத்தல் சம்பவங்கள் கடந்த 3 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருப்பது, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
 இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 இந்தியாவுக்கும், பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச எல்லைப் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டில் ஆயுதங்கள், போதைப் பொருள், கால்நடைகள் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் குறித்து 19,537 வழக்குகள் பதிவாகியிருந்தன. இந்த எண்ணிக்கையானது 2017ஆம் ஆண்டில் 31,593ஆக அதிகரித்து விட்டது. இதில் 2016ஆம் ஆண்டில் அதிகப்பட்சமாக 23,198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
 அதேபோல், கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் 1,501 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை, 2016ஆம் ஆண்டில் 1,893ஆகவும், 2017ஆம் ஆண்டில் 2,299ஆகவும் அதிகரித்துள்ளது.
 பெரும்பாலான கடத்தல் சம்பவங்கள், இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லையில்தான் நடந்துள்ளன. வங்கதேச எல்லையில் மட்டும் கடந்த 2015ஆம் ஆண்டில் 18,132 கடத்தல் சம்பவங்கள் நடந்தன. அந்த எண்ணிக்கை, 2016ஆம் ஆண்டில் 21,771ஆகவும், 2017ஆம் ஆண்டில் 29,693ஆகவும் உயர்ந்தன. எனினும், 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டில் வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 2015ஆம் ஆண்டில் 656 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 2017ஆம் ஆண்டில், 633 பேர் கைது செய்யப்பட்டனர்.
 இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதி, 3,000 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். ஆனால் இந்தப் பகுதியில் ஆயுதக் கடத்தலோ, கால்நடைகள், போதைப் பொருள் கடத்தலோ நடைபெற்றதாக தகவல் இல்லை என்று அந்த புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com