பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது

வன்முறையாலும், துன்புறுத்தல்களாலும் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது

வன்முறையாலும், துன்புறுத்தல்களாலும் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
 "மனதின் குரல்' என்ற மாதாந்திர வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகையில் அவர் கூறியதாவது:
 சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் கடந்த 1919-ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இந்த சோக நிகழ்வின் 100-ஆம் ஆண்டு நினைவு தினம் அடுத்த ஆண்டு அனுசரிக்கப்பட இருக்கிறது.
 வன்முறைகளும், துன்புறுத்தல்களும் எந்தப் பிரச்னைக்கும் தீர்வாக அமையாது. மாறாக அமைதி, அகிம்சை, தியாகம் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். அன்று ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற சோக நிகழ்வு ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாக அமைந்தது.
 அன்றைய அரசு தனக்கு இருந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஆயுதம் ஏதும் ஏந்தாத அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றது. இது மிகவும் கொடூரமான, மனிதத்தன்மையற்ற செயலாக வரலாற்றில் நிலைபெற்றுள்ளது.
 ஜாதியப் பாகுபாடு கூடாது: மேலும், அடுத்த ஆண்டு குரு நானக்கின் 550ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் அவரது முக்கியமான போதனையை நான் நினைவுகூர விரும்புகிறேன். ஜாதிரீதியாக யாரிடமும் பாகுபாடு காட்டக் கூடாது என்பதுதான் அந்த போதனை. குரு நானக்கை நினைவுகூரும்போது அவரது போதனைகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.
 தொழில்துறையில் தற்சார்பு: இந்தியாவின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் பாடுபட்ட முக்கியத் தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை சனிக்கிழமை அனுசரித்தோம். இந்தியாவின் முதல் தொழில்துறை அமைச்சரான அவர், நாட்டில் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான அடிக்கல்லை நாட்டினார். சுதந்திர இந்தியாவின் முதல் தொழில் கொள்கை 1948-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில், முன்னேற்றத்துக்கான சியாமா பிரசாத் முகர்ஜியின் யோசனைகளும் தொலைக்நோக்குத் திட்டங்களும் இடம் பெற்றிருந்தன. இந்தியத் தொழில் துறை முழுவதும் தற்சார்புடன் செயல்பட வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.
 சிறு, குறு தொழில்களுக்கும், நூற்பாலைகள், குடிசைத் தொழில்களுக்கும் அவர் உரிய முக்கியத்துவம் அளித்தார். மேலும், இந்திய ராணுவத்துக்கான ஆயுதங்கள் முழுவதும் உள்நாட்டுத் தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதும் அவரது முக்கிய கனவாக இருந்தது என்றார் மோடி.
 ஜிஎஸ்டியில் மாநிலங்களின் பங்கு: தொடர்ந்து, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்துப் பேசிய மோடி, "ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஜிஎஸ்டி மிகச்சிறந்த உதாரணமாகும். "ஒரே நாடு ஒரே வரி' என்ற இந்தத் திட்டத்தை அமல்படுத்த முழு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேச நலன் கருதி ஜிஎஸ்டி விஷயத்தில் அனைத்து மாநில அரசுகளும் ஒருமித்த கருத்தை ஏற்றுக் கொண்டன. நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வரிச் சீர்திருத்தம் இது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் ஜிஎஸ்டி-யின் பங்கு முக்கியமானது. ஜிஎஸ்டி-க்கு முன்பு வரித் துறையில் அதிகாரிகளின் ஆதிக்கம் இருந்தது. இப்போது, அது முடிவுக்கு வந்துவிட்டது.
 ஒருங்கிணைக்கும் விளையாட்டு: சமூகத்தை ஒருங்கிணைப்பதில் விளையாட்டுப் போட்டிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அண்மையில் பெங்களூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி நமது நாட்டில் தங்களின் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது பெருமைக்குரியதாகும். அந்த அணியின் ரஷீத் கான் கிரிக்கெட் உலகுக்கு கிடைத்த சிறந்த பரிசாகும். அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.
 போட்டியில் வென்ற இந்திய அணி வீரர்கள், கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது, ஆப்கானிஸ்தான் அணி வீரர்களையும் தங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள அழைத்தனர். சமூகத்தை ஒருங்கிணைப்பதில் விளையாட்டு எந்த அளவுக்கு உதவிகரமாக உள்ளது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். இரு அணி வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.
 அண்மையில் சர்வதேச யோகா தினம் இந்தியாவில் மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உடல்நலத்தைப் பாதுகாப்பதில் பெரும் புரட்சியாகவே இந்த நிகழ்வைக் கருதுகிறேன். வரும் காலத்தில் மேலும் கோடிக்கணக்கான மக்கள் யோகா குறித்து விழிப்புணர்வு பெற்று அதனை அன்றாட வாழ்வில் அங்கமாக்கிக் கொள்வாôர்கள்' என்று மோடி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com