மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு: நிதீஷ் கட்சி யோசனை-பாஜக ஏற்க மறுப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி, பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி, பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் புதிய யோசனையை முன்வைத்துள்ளது. ஆனால், அதனை ஏற்க பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 பிகாரில் கடந்த 2015-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது.
 பின்னர், லாலு கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு மகா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதீஷ், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் ஆட்சியமைத்தார்.
 அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிகாரில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், பாஜகவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 இந்த விவகாரத்தில், இரு கட்சிகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கப்படாத நிலையில், 2015 பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தொகுதி பங்கீடு அமைய வேண்டும் என்ற யோசனையை ஐக்கிய ஜனதா தளம் முன்வைத்துள்ளது.
 இதுதொடர்பாக அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பிகாரில் அண்மைக் காலத்தில் கட்சிகளின் செல்வாக்கை மதிப்பிடும் அளவுகோலாக கடந்த 2015 சட்டப் பேரவைத் தேர்தலைதான் எடுத்துக் கொள்ள முடியும்.
 அந்த தேர்தலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 71 இடங்களில் வெற்றி பெற்றது.
 பாஜக 53 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஆகியவை தலா இரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
 இந்த முடிவுகளை அடிப்படையாக கொண்டு, 2019 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு அமைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்று ஐக்கிய ஜனதா தள கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 ஆனால், பிகாரில் தற்போதுள்ள அரசியல் சூழலில் மேற்கண்ட யோசனை சரியானதல்ல என்பதே பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
 கடந்த 2015 பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனான கூட்டணியால் ஐக்கிய ஜனதா தளம் பலனடைந்தது. ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 2 தொகுதிகளில்தான் அக்கட்சி வெற்றி பெற்றது.
 22 தொகுதிகளில் பாஜகவும், லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சிகள் முறையே 6, 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2014 தேர்தல்தான் கட்சிகளின் உண்மையான செல்வாக்கை காட்டும் வகையில் உள்ளது என்றார் அவர்.
 பிகாரில் அண்மையில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டங்களை ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் புறக்கணித்துவிட்டனர்.
 மேலும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com