மத்திய தகவல் ஆணையத்தை நாடிய பிரதமர் மோடியின் உறவினர்?

குஜராத் மாநிலத்தில் தனது இடத்தை அரசு மருந்தகத்துக்காக குத்தகைக்கு விட்டிருந்த மூதாட்டி ஒருவர், அதுதொடர்பான பிரச்னையில் மத்திய தகவல் ஆணையத்தை (சிஐசி) நாடியபோது தாம் பிரதமர் நரேந்திர மோடியின்

குஜராத் மாநிலத்தில் தனது இடத்தை அரசு மருந்தகத்துக்காக குத்தகைக்கு விட்டிருந்த மூதாட்டி ஒருவர், அதுதொடர்பான பிரச்னையில் மத்திய தகவல் ஆணையத்தை (சிஐசி) நாடியபோது தாம் பிரதமர் நரேந்திர மோடியின் அத்தை என்று கூறியுள்ளார்.
 இந்த விவகாரம் குறித்த விவரம் வருமாறு:
 குஜராத்தின் மேசனா மாவட்டத்தில் வத்நகர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் தாஹிபென் நரோட்டம்தாஸ் மோடி (90). விதவையான இவர், மத்திய தகவல் ஆணையத்தில் தெரிவித்துள்ள தகவலின்படி, கடந்த 1983-ஆம் ஆண்டு தாஹிபென் தனக்கு சொந்தமான இடத்தை அரசு மருந்தகம் அமைப்பதற்காக மாதம் ரூ.600 வாடகையில் குத்தகைக்கு விட்டுள்ளார்.
 பீடித் தொழிலாளர்கள் நலனுக்கான மருந்தகம் அந்த இடத்தில் செயல்பட்டு வந்துள்ளது. 1983 மற்றும் 1998-ஆம் ஆண்டுகளில் குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதுடன், வாடகைத் தொகை ரூ.1,500-ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு குத்தகைத் தொகை அதிகரிக்கப்படவில்லை.
 இந்நிலையில், நீண்டகாலமாக குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாதது குறித்து, தாஹிபென் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தகவல் கோரியிருந்தார்.
 அதற்கு மத்திய மக்கள் தொடர்பு அலுவலர் அளித்த பதிலில் திருப்தி அடையாத தாஹிபென், உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்தார். அதில் அவர், தாம் பிரதமர் நரேந்திர மோடியின் அத்தை எனவும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டால் பிரதமர் மோடியிடம் முறையிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
 எனினும், அந்த மேல்முறையீடு தொடர்பாக உரிய பதில் கிடைக்காததை அடுத்து அவர் மத்திய தகவல் ஆணையத்தை நாடினார். அதுதொடர்பாக தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு விசாரணை மேற்கொண்டார். அப்போது, புதிய குத்தகை ஒப்பந்தத்துக்காக ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தாஹிபென் தரப்புக்கு 2002, 2008 ஆண்டுகளில் கடிதம் அனுப்பியதாக தொழிலாளர் நல ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 தனக்கு தேவையான தகவல்கள் கிடைக்காமல் தன்னால் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாது என்று தாஹிபென் தரப்பில் வாதாடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, "தனக்கு உரிய பதில் கிடைக்காத சூழ்நிலையிலேயே தாம் பிரதமர் மோடியின் உறவினர் என்ற தகவலை தாஹிபென் தெரிவித்துள்ளார். அவரது மனுவை முறையாகக் கையாளாத அதிகாரிகளுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com