மாயமான விடைத்தாள்கள்: பிகாரில் பழைய பேப்பர் கடைக்கு விற்பனை

பிகார் மாநிலத்தில் மாயமான 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள், பழைய பேப்பர் கடைக்கு விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிகார் மாநிலத்தில் மாயமான 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள், பழைய பேப்பர் கடைக்கு விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, பள்ளியின் இரவுக் காவலர் உள்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து கோபால்கஞ்ச் காவல் துறை எஸ்.பி. ரஷீத் ஜமான், பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 கோபால்கஞ்ச் நகரில் உள்ள எஸ்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன.
 சுமார் 200 பைகளில், 40,000 விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த விடைத்தாள்கள் மாயமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
 இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பள்ளியின் இரவுக் காலவர் புஜான் சிங், உதவியாளர் சிட்டு சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சஞ்சய் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன், பழைய பேப்பர் கடைக்கு அந்த விடைத்தாள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
 அதையடுத்து, சஞ்சய் குமாரும், பழைய பேப்பர் கடையின் உரிமையாளர் பப்பு குமார் குப்தாவும் கைது செய்யப்பட்டனர்.
 அந்த விடைத்தாள்களை பழைய காகிதங்களாகக் கருதி, புஜான் சிங், சிட்டு சிங் ஆகியோருக்கு ரூ.8,500 கொடுத்ததாக, பழைய பேப்பர் கடை உரிமையாளர் கூறினார். அந்த கடையில் இருந்து சில விடைத்தாள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதுதொடர்பாக, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
 இந்நிலையில், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், வரும் 26-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. மதிப்பெண் பட்டியலில், மாயமான விடைத்தாளுக்கு உரிய மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களும் இடம்பெற்றிருக்கும்.
 விடைத்தாள்கள் திருத்தப்பட்டவுடன் மாணவர்கள் பெற்ற மதிப்பெண், பதிவேடுகளில் குறிக்கப்பட்டு விட்டதால், விடைத்தாள் மாயமானதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று மாநில கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com