சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை! திருமணம் செய்ய மறுத்ததால் நண்பரின் மனைவியைக் கொடூரமாக கொலை செய்த ராணுவ அதிகாரி!

ஒரு பெண்ணாக இருப்பதில் மட்டுமே எவ்வளவு ஆபத்து உள்ளது என்று நினைத்தால் பல சமயம் அஞ்சாமல் இருக்க முடியவதில்லை
சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை! திருமணம் செய்ய மறுத்ததால் நண்பரின் மனைவியைக் கொடூரமாக கொலை செய்த ராணுவ அதிகாரி!

ஒரு பெண்ணாக இருப்பதில் மட்டுமே எவ்வளவு ஆபத்து உள்ளது என்று நினைத்தால் பல சமயம் அஞ்சாமல் இருக்க முடியவதில்லை. செய்தித் தாளில், சமூக வலைத்தளங்களில், அக்கம் பக்கத்தில் என கேட்கும் செய்திகளில் 70 சதவிதகத்துக்கு மேல் பெண் சார்ந்த குற்றவியல் சம்பவங்களே நிறைந்துள்ளன. அவற்றுள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள் என வகைப்படுத்தினாலும் பெண்களுக்கு எதிரே நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூரச் செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு உளவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், சக உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளாதவரை எவ்வித மாற்றங்களை எதிர்ப்பார்க்க முடியாது.

ஒவ்வொரு நாட்டிலும் ராணுவமும், காவல்துறையும் தான் ஒழுக்கத்துக்கும் கண்ணியத்துக்கும் பெயர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதிகாரச் செறுக்கு ஏற்படும் எவரும் மிருகத்தை விட கீழானவர்களாகிவிடுகின்றனர் என்பதற்கான சாட்சிதான் போர் சமயங்களில் பெண்களை பலியாடாக்கி வன்புணர்வு செய்யும் அவலச் செயல்கள் நிகழ்கின்றன. பெண்ணை பகடையாக்கவும்,  அவர்தம் உணர்வுகளை பொருட்படுத்தாமல் போகப் பொருளாக நினைக்கும் மனப்போகும் பெருகி வரும் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கற்பனையில் மட்டுமே என்பதுதான் சுடும் நிஜம். தாம்பஸன் ரய்டர்ஸ் (Thomson Reuters Foundation survey) ஆய்வுக் குழு வெளியிட்ட பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடுகள் எனும் பட்டியலில் முதல்  இடத்தில் இந்தியா உள்ளது. ஆஃப்கானிஸ்தான், காங்கோ, பாகிஸ்தான், இந்தியா, சோமாலியா மற்றும் சவுதி அரேபியா இவைதான் பெண்களுக்கு ஆபத்தான இடங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது.

அண்மையில் தில்லி ராணுவ அதிகாரியின் மனைவி சைலஜாவின் கொலை வழக்கு இதைத்தான் உணர்த்துகிறது. ராணுவ அதிகாரி அமித் திவிவேதியின் மனைவி தான் சைலஜா திவிவேதி (Shailza Dwivedi). ஒரே மகனுடன் தில்லியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சிறிய குடும்பம் அது. பிஸியோதெரபி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற  சைலஜா வீடு திரும்பவில்லை. அமித் டிரைவரை மருத்துவமனைக்கு அனுப்பினார். அங்குள்ளவர்கள் சைலஜா சில மணி நேரத்துக்கு முன்பே கிளம்பி விட்டதாக கூறினார்கள். ட்ரைவரும் திரும்பிவிட்டார். ஆனால் சைலஜா வீட்டிலும் இல்லை என்பதால் அமித்துக்கு குழப்பமானது. மீண்டும் சைலஜாவின் போனுக்கு அழைத்தும் பயனில்லை. மனைவியைத் தேடி அலைந்து கடைசியில் சோர்ந்து போய் வீட்டுக்குத் திரும்பினார். அன்றிரவு முழுவதும் சைலஜா வீடு திரும்பாததால், போலீஸ் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்தார். 

அப்போது தில்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் சைலஜா கொலை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், கிடைத்தார். அமித் கடும் அதிர்ச்சியில் கதறி அழுதார். தனது மனைவியை கொன்றவனை விரைவில் கண்டுப்பிடிக்கும் படி காவல் ஆணையத்திடம் புகார் அளித்தார். 

அச்சமயம் துக்கம் விசாரிக்க, அமித்தின் நண்பரும், ராணுவ அதிகாரியான நிகில் ஹாண்டா தில்லிக்கு வந்தார். அமித்துக்கு ஆறுதல் கூறியதுடன், சைலஜா கொலை வழக்கை வேகமாக விசாரித்து குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்றும் நிகிலும் போலீஸாரிடம் கேட்டுக் கொண்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த தில்லி காவல் துறையினர், சைலஜாவின் செல்போன் நம்பரை வைத்து திடுக்கிடும் பல உண்மைகளை கண்டு பிடித்தனர். அதில் கடந்த ஆறு மாதங்களாக நிகிலுக்கும் சைலஜாவுக்கும் இடையே செல்போன் கால்கள் இருந்தன என்பதை முதலில் கண்டுபிடித்தனர். 6 மாதங்களில் 3500 அழைப்புக்கள் மற்றும் மெசேஜ்கள் இருந்துள்ளன.  

தனது நண்பரின் மனைவி என்றும் பாராமல் கடந்த சில மாதங்களாக நிகில் ஹாண்டா, சைலஜாவிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுபடியும் வற்புறுத்தி வந்துள்ளார் என்று தெரிய வந்தது. கொலை நடந்த அன்று, சைலஜாவின் செல்போனிற்கு தொடர்புக் கொண்ட நிகில், அவரை நேரில் சந்திக்க வரும்படி அழைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது மீண்டும் அவரின் வற்புறுத்தல் தொடரவே, சைலஜா மறுத்துள்ளார். இந்தப் பிரச்னையில் ஏற்பட்ட கோபத்தில் நிகில், சைலஜாவை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, அவர் மீது தன்னுடைய ஹோண்டா சிட்டி காரை ஏற்றி கொலை செய்துள்ளார். மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த சைலஜாவின் முகத்தில் காரை ஏற்றி முகத்தை சிதைத்துள்ளார். அதன் பின் தன்னுடைய காரை சர்வீஸுக்குக் கொடுத்துவிட்டு, செல்போனையும் உடைத்து சுக்கு நூறாக்கி குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிட்டு அவர் தங்கியிருக்கும் தனது ஊருக்குத் திரும்பிச் சென்றுள்ளார்.

தீவிரமாக இந்த கேஸை விசாரித்து வந்த தில்லி போலீஸார் உண்மையை அறிந்து நிகில் ஹாண்டாவை அவரது சொந்த ஊரான மீரட்டுக்குச் சென்று கைது செய்தனர். ஹோண்டா கார் டயரில் உள்ள ரத்தக் கறை, சைலஜா காரில் ஏறும் சிசிடிவி பதிவு உள்ளிட்ட பல ஆதாரங்கள் நிகிலுக்கு எதிராக சிக்கியுள்ளது. நிகில் சைலஜாவை 2015-ம் ஆண்டு நாகாலாந்தில் சந்தித்துள்ளார். அப்போது அமித் ட்ரான்ஸ்பர் ஆகி குடும்பத்துடன் அங்கு தங்கியிருந்தனர். அழகிப் போட்டியில் கலந்து கொண்டு இறுதிச் சுற்று வரை ஜெயித்த சைலஜா அழகானவர். திருமணம், குழந்தைப் பேறு ஆகியவற்றுக்குப் பிறகும், தனது அழகை பராமரித்து வருபவர். 

நாகாலாந்திலிருந்து மீண்டும் மாற்றலுக்குள்ளாகி தில்லி வந்த போதும், சைலஜா நிகிலை குடும்ப நண்பராக கருதி, தொடர்பில் இருந்துள்ளார். அவருடன் சாதாரணமாக பேசி வந்துள்ளார். ஆனால் நிகில் திடீரென்று மனம் மாறி அமித்தை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தத் தொடங்கியுள்ளார். இந்த விவாதத்தில் தான் சைலஜா உயிர் இழக்க நேரிட்டது. இருவரின் போனையும் நிகில் உடைத்துவிட்டதால் அவர்கள் பயன்படுத்திய ஆப்கள் கிடைக்கவில்லை. அதிலிருந்து மேலும் சில தகவல்களைப் பெற முடியும் என்ற நிலையில்தான் நிகில் ஹாண்டா கையும் களவுமாக பிடிபட்டிருந்தார். நம்பிய நண்பனுக்கு துரோகம் செய்ய துணிந்ததுடன், இரக்கமின்றி கொலை செய்யும் அளவுக்கு நிகில் கொடூரமானவராக ஒரு ராணுவ அதிகாரி இருந்துள்ளார் என்பது அவரது சுற்றத்தாருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com