துல்லியத் தாக்குதல்: காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய துல்லியத் தாக்குதல்களை முன்வைத்து அரசியல் செய்வதாககாங்கிரஸ் தெரிவித்த குற்றறச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
துல்லியத் தாக்குதல்: காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

கடந்த 2016 செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் பகுதியில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு சென்று இந்திய ராணுவ வீரர்கள் துல்லிய தாக்குதல் நடத்தினர். அந்த விடியோ காட்சி நேற்று (புதன்கிழமை) வெளியானது. இந்நிலையில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பாஜக இந்த விடியோவை வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்தது.   

இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கா் பிரசாத் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

"துல்லியத் தாக்குதல்களை முன்வைத்து பாஜக அரசியல் செய்யவில்லை. இதுதொடா்பாக காங்கிரஸ் தெரிவித்த குற்றறச்சாட்டுகளை பாஜக நிராகரிக்கிறது. துல்லியத் தாக்குதல்களை முன்வைத்து, அரசியல் செய்ய வேண்டும் என்று பாஜக விரும்பியிருந்தால், அந்தத் தாக்குதல் தொடா்பான விடியோ காட்சிகளை உத்தரப் பிரதேசம், குஜராத், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல்கள் நடைபெற்றற நேரத்தில் பாஜக வெளியிட்டிருக்கும். 

ஆனால் அப்படி நாங்கள் செய்யவில்லை.
 
கடந்த 2016-ஆம் ஆண்டு துல்லியத் தாக்குதல்களில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், தற்போது வெளியாகியுள்ள விடியோ காட்சிகளை உண்மையான காட்சிகள் தான் என உறுதி செய்துள்ளனா். 

இந்நிலையில், அந்த விடியோ எதற்காக தற்போது வெளியிடப்பட்டது? அதை யார் வெளியிட்டது? என கேள்வியெழுப்புவது சரியல்ல. 

அந்த விடியோ காட்சியை உண்மை என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனவா? பொய் என நினைக்கின்றனவா? என்பதை தெரிவிக்க வேண்டும். துல்லியத் தாக்குதல்கள் நடந்ததையாவது ஏற்றுக் கொள்கின்றனவா? என்றும் எதிர்க்கட்சிகள் விளக்கமளிக்க வேண்டும்.

துல்லியத் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வெளியிடும் கருத்துகளை பார்த்து, பயங்கரவாதிகளும், பாகிஸ்தானில் இருக்கும் அவரது ஆதரவாளா்களும் மகிழ்ச்சியடைவார்கள். தோ்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்த காரணத்தால், காங்கிரஸ் விரக்தியடைந்துள்ளது. இதன் காரணமாகவே, நமது பாதுகாப்புப் படை வீரா்களின் துணிச்சல், உறுதி ஆகியவை குறித்து தொடா்ந்து காங்கிரஸ் கேள்வியெழுப்புகிறது. 

இது பயங்கரவாதிகளின் மன உறுதியை அதிகரிக்கவே செய்யும். தோ்தலில் வாக்குகளை பெறுவதற்காக இந்நிலைக்கு காங்கிரஸ் இறங்கி வந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகளை வைத்து பார்க்கையில், அக்கட்சியானது முக்கிய அரசியல் கட்சி கிடையாது என்பதும், சிறிய குழுதான் என்பதும் தெளிவாக தெரிகிறது. 

இந்த சிறிய குழுதான், தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளது.

குஜராத் முதல்வராக பிரதமர் மோடி பதவி வகித்தபோது, அவரை காங்கிரஸ் தலைவராக அப்போது இருந்த சோனியா காந்தி, ‘மெளத் கீ செளதகார்’ என விமர்சித்தார். 

அதேபோல், துல்லியத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய அரசை ராகுல் காந்தி ‘கூன் கி தலாலி’ என்று புகார் கூறினார். ராகுல் காந்திக்கு, நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை, மறைந்த முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்புடன் ஒப்பிட்டதில் இருந்து காங்கிரஸ் எத்தகைய தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றார் ரவிசங்கர் பிரசாத்.

பாரிக்கர் குற்றறச்சாட்டு: துல்லியத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கரும் காங்கிரஸை விமர்சித்துள்ளார். 

அவர் கூறுகையில், "துல்லியத் தாக்குதலின் உண்மைத் தன்மை குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியிருந்தது. தற்போது வெளியாகியுள்ள விடியோவில் இருந்து, பாதுகாப்புப் படை வீரர்கள் நடவடிக்கை தொடர்பாக சந்தேகம் கொண்டது தவறு என்பதை காங்கிரஸ் உணா்ந்து கொள்ள வேண்டும்.

தேசிய விவகாரம், பாதுகாப்புப் படைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது காங்கிரஸ் மிகக் கவனமாக கருத்து தெரிவிக்க வேண்டும். தாக்குதல் நடத்தியதற்கான பெருமை, பாதுகாப்புப் படைகளையே சேரும். அதேபோல், துல்லியத் தாக்குதல் நடத்துவது தொடர்பான துணிச்சலான முடிவெடுத்த அரசியல் தலைமை, இதற்கு உரிமை கொண்டாடக் கூடாது எனத் தெரிவிக்க முடியாது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com