வெளிநாடு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நிதி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 
வெளிநாடு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நிதி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த புதிய சட்ட மசோதா வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி மோசடி செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக ரூ.9 ஆயிரம் கோடிக்கு மோசடி செய்த விஜய் மல்லையா, ரூ.11 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்த நீரவ் மோடி ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விசாரணைக்காக நாடு திரும்ப மறுக்கின்றனர்.

மேலும், இவர்களை கைது செய்வதிலும், சொத்துக்களை உடனடியாகப் பறிமுதல் செய்வதிலும் பலதரப்பட்ட சிக்கல்களும் நீடிக்கிறது. எனவே இவ்வாறு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை உடனடியாகப் பறிமுதல் செய்வது தொடர்பான புதிய சட்ட மசோதா தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது வருகிற 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் மார்ச் 5-ந் தேதி தொடங்கும் 2-ஆம் பகுதியின் போது அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நமது நாட்டில் இந்த புதிய சட்டத்தினை அமல்படுத்துவதன் மூலம் நிதி மோசடி செய்த குற்றவாளிகளின் அனைத்து சொத்துக்களும் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். அதுமட்டுமல்லாது அவரது பினாமி சொத்துக்களும் எளிதில் பறிமுதல் செய்ய முடியும். ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்யும் அத்தனை பேரின் மீதும் இந்த சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகளின் சொத்துக்களையும் இந்த சட்டத்தின் மூலம் பறிமுதல் செய்ய முடியும். அதுகுறித்து மத்திய அரசு சம்பந்தப்பட்ட நாட்டின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். 

இதன்மூலம் மிகப்பெரிய நிதி மோசடி குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எளிதில் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த புதிய சட்ட மசோதா வருகிற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com