3 மாநில வாக்கு எண்ணிக்கை: பாஜக தொடர்ந்து முன்னிலை

திரிபுரா, மேகாலாயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
3 மாநில வாக்கு எண்ணிக்கை: பாஜக தொடர்ந்து முன்னிலை

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (மார்ச் 3) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 59 தொகுதிகளைக் கொண்ட திரிபராவில் பிப்ரவரி 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 92 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு பாஜக மற்றும் ஐபிஎஃப்டி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. 25 ஆண்டுகளாக மாணிக் சர்கார் தலைமையில் ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இங்கு போட்டியிட்டன. இதில் பாஜக கூட்டணி 39 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 20 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.

மொத்தம் 60 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேகாலயாவில் 59 இடங்களுக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றன. இதில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸுடன், பாஜக மற்றும் என்பிபி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இதில் ஆளும் காங்கிரஸ் 23 இடங்களிலும், பாஜக கூட்டணி 15 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.

மொத்தம் 60 இடங்களைக் கொண்ட நாகாலந்து பேரவைக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பாஜக, என்டிபிபி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. காங்கிரஸ், என்பிஎஃப் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. இதில் 30 இடங்களில் பாஜக கூட்டணியும், 29 இடங்களில் என்பிஎஃப் கட்சியும், ஒரு இடத்தில் மற்றவையும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com