தமிழகத்துக்கு இனி தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை: கர்நாடகம் திட்டவட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகத்தில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு இனி தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை: கர்நாடகம் திட்டவட்டம்

தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரும் கர்நாடக மாநிலத்துக்கு 284.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது. அதேசமயம் கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்ற அளவில் மாற்றமும் செய்யவில்லை.

அதேசமயம் இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதால், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் ஆலோசனை நடத்த தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தில்லியில் மத்திய நீர்வள மேம்பாட்டுத் துறை சார்பாக நாளை (மார்ச் 9) ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில் தமிழகம் சார்பில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, பொதுத் துறை மற்றும் முதல்வர் அலுவலக செயலாளர் செந்தில் குமார், போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை கூட்டம் தொடர்பாக கர்நாடகத்தில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி வாரியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 4 மாநில பிரதிநிதிகள் கொண்ட குழுவில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம். கர்நாடக சட்டக்குழு காவிரி விவகாரத்தில், என்ன சொல்கிறதோ அதனை செயல்படுத்துவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு வழங்கவேண்டிய காவிரி நீர் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டது, இனி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com