இந்தியாவுக்கு வர வாய்ப்பு இல்லை: சிபிஐ-க்கு மெஹுல் சோக்ஸி பதில்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,646 கோடி வரை கடன் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளர் மெஹுல் சோக்ஸி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,646 கோடி வரை கடன் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளர் மெஹுல் சோக்ஸி, தான் இந்தியாவுக்கு திரும்பிவர வாய்ப்பு இல்லை என்று சிபிஐ-க்கு இ-மெயில் மூலம் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோக்ஸிக்கு சிபிஐ இ-மெயில் மூலம் சம்மன் அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்து இ-மெயில் மூலம் சோக்ஸி அனுப்பியுள்ள 7 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது, ஏற்கெனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு இப்போது உடல்நலக் குறைவும் ஏற்பட்டுள்ளது எனவே என்னால் இந்தியாவுக்கு வர இயலாது. மேலும், நான் இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்ற நிலையும் உள்ளது.
மேலும், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் அரசியலாக்கப்பட்டுவிட்டன. இந்தியாவில் ஊடகங்களே நீதிமன்றமாக மாறி விசாரணை நடத்தி என் மீது அபாண்டமான பழிகளை சுமத்து வருகின்றன. மேலும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதாயத்துக்காக என் மீது குற்றச்சாட்டுகளை பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால், இந்தியாவுக்கு வந்தால் அரசமைப்புச் சட்டப்படி எனக்கு கிடைக்க வேண்டிய நீதி பெறும் உரிமைகள் கூட கிடைக்காது. நியாயமான முறையில் விசாரணை எதிர்கொள்ள எனக்கு வாய்ப்பு தரப்படமாட்டாது என்று சோக்ஸி தெரிவித்துள்ளார்.
நீரவ் மோடி, சோக்ஸிக்கு சிபிஐ மீண்டும் சம்மன்: இதனிடையே, வங்கிக் கடன் முறைகேடு தொடர்பாக வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு சிபிஐ மீண்டும் சம்மன் (அழைப்பாணை) அனுப்பியுள்ளது. இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 19, 23 மற்றும் 28-ஆம் தேதிகளில் அவர்கள் இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. அதில், அவர்கள் விசாரணைக்காக மார்ச் 7-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அவர்கள் நேரில் ஆஜராகாததை அடுத்து வியாழக்கிழமை அவர்கள் இருவருக்கும் மீண்டும் ஒரு சம்மனை சிபிஐ அனுப்பியுள்ளது.
மேலும் பல முறைகேடுகள்?: இந்நிலையில் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகிய இருவரின் வங்கிக் கடன் மோசடித் தொகை மேலும் அதிகரிக்கும் என்று மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். இதுவரை அவர்கள் ரூ.12,646 கோடி கடன் முறைகேடு செய்துள்ளது வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் வேறு எந்த வகைகளில் எல்லாம் வங்கிகளில் கடன் பெற்று முறைகேடு செய்துள்ளனர் என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமாக, வங்கிகள் அனைத்து வாராக் கடன்களையும் முழுமையாக ஆய்வு செய்யுமாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் மேலும் பல கடன் முறைகேடுகள் வெளிப்படும் என்று தெரிகிறது. மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுபாஷ் சந்திர கார்க் இதனை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com