உ.பி.யில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு: பாதுகாப்பை உறுதிசெய்ய முதல்வர் அறிவுறுத்தல்

உத்தரப் பிரதேசத்தில் அரசியல் தலைவர்களின் சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் அரசியல் தலைவர்களின் சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் சட்ட மேதை அம்பேத்கரின் சிலை மர்ம நபர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தப்பட்டது. அதையடுத்து, அந்த இடத்தில் அரசு சார்பில் புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, முதல்வர் யோகி ஆதித்யநாத், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீரட் நகரில் நடந்ததைப் போன்று, வேறு எங்கும் எந்த சம்பவமும் நடைபெறாத வகையில், காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே அரசின் முதன்மையான பணியாகும். மேலும், மாநிலத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அனைத்து மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.
வாக்குறுதிகள் போதாது- மாயாவதி: இதனிடையே, அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி, அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைத்தவர்கள் மீது தேச விரோதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
சிலை அவமதிப்பு சம்பவங்கள், நாட்டு நலனுக்கு உகந்தவை அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் ஜனநாயக, மதச் சார்பற்ற கட்டமைப்பையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைத்து விடுகின்றன. சிலை தகர்ப்பு செயலில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய, மாநில அரசுகள் வெற்று வாக்குறுதிகளை அளிப்பது மட்டுமே போதுமானதாக இருக்காது. சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது தேச விரோதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் மாயாவதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com