சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை நிதீஷ் குமாரும் எழுப்ப வேண்டும்: ஆர்ஜேடி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தைரியத்துக்கு வணங்குகிறோம்; அவரைப் போன்று பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசுக்கு அழுத்தம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தைரியத்துக்கு வணங்குகிறோம்; அவரைப் போன்று பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வலியுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் மனோஜ் ஜா, பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
லெனின், பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகள் சேதப்பட்டபோதும், சமாஜவாதி கட்சித் தலைவர் மாயாவதி, எம்.பி. ரேணுகா சௌதரி ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டபோதும் முதல்வர் நிதீஷ் குமார் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்துவரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தைரியத்துக்கு தலை வணங்குகிறோம். 
பிகாரில் இருந்து ஜார்க்கண்ட் பிரிந்ததைப் போன்று ஆந்திரத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாக உதயமானது. 
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று முதல்வர் நிதீஷ் குமார் ஏற்கெனவே கோரிக்கை விடுத்து வந்தார். பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் கண்டு அவர் அஞ்சி வருகிறார்.
முதல்வர் நிதீஷ் குமார் இந்த விகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வியாழக்கிழமை கூடிய சட்டப் பேரவையில் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டுவர கோரினோம்.
இதுதொடர்பாக அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை எனில், ஆர்ஜேடி போராட்டத்தில் ஈடுபடும் என்றார் மனோஜ் ஜா.
தேசிய அளவில் காங்கிரஸுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
உங்களுடைய கணிப்பு தவறானது. இடைத்தேர்தல்களில் பாஜகவைவிட காங்கிரஸ்தான் அதிக வெற்றிகளைப் பெற்று வருகிறது.
சந்திரபாபு நாயுடு மட்டும் பாஜகவை எதிர்க்கவில்லை. மாறாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அகாலி தளம் ஆகிய கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகின்றன. ஹிஸ்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சியும் காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணியில் இணைந்துவிட்டார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணி அமையும் என்றார் மனோஜ் ஜா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com