நாகாலாந்து முதல்வரானார் நெபியூ ரியோ: பாஜக தலைவர் பட்டானுக்கு துணை முதல்வர் பதவி

நாகாலாந்து மாநிலத்தின் புதிய முதல்வராக தேசிய ஜனநாயக மக்கள் கட்சி (என்டிபிபி) தலைவர் நெபியூ ரியோ வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பாஜகவைச் சேர்ந்த ஒய்.பட்டான் துணை
கொஹிமாவில் பதவியேற்பு விழாவுக்குப் பின் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட நாகாலாந்தின் புதிய முதல்வர் நெபியூ ரியோ (முதல் வரிசையில் இடமிருந்து 3-ஆவது), ஆளுநர் பி.பி.ஆச்சார்யா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷ
கொஹிமாவில் பதவியேற்பு விழாவுக்குப் பின் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட நாகாலாந்தின் புதிய முதல்வர் நெபியூ ரியோ (முதல் வரிசையில் இடமிருந்து 3-ஆவது), ஆளுநர் பி.பி.ஆச்சார்யா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷ

நாகாலாந்து மாநிலத்தின் புதிய முதல்வராக தேசிய ஜனநாயக மக்கள் கட்சி (என்டிபிபி) தலைவர் நெபியூ ரியோ வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பாஜகவைச் சேர்ந்த ஒய்.பட்டான் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர்களது தலைமையில் 10 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
மாநில ஆளுநர் பி.பி. ஆச்சார்யா அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நாகாலாந்தின் முதல்வராக ரியோ பொறுப்பேற்பது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 27 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக மக்கள் கட்சி (என்டிபிபி), பாஜக கூட்டணி 30 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 1 தொகுதியையும் கைப்பற்றின.
ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் என்டிபிபி-பாஜக கூட்டணியானது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சை ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியது. அதைத் தொடர்ந்து, நெபியூ ரியோ தலைமையிலான கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக, பதவியேற்பு விழா நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் வியாழக்கிழமை நடைபெறறது. பாஜகவுக்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சரவையில் 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான இலாக்காக்கள் விரைவில் ஒதுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கோஹிமாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, பாஜக தலைவர் அமித் ஷா, பொதுச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநிலத்தின் முந்தைய முதல்வர் ஜீலியாங்கும் அதில் பங்கேற்றார்.
அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும் விழாவில் கலந்து கொண்டனனர். அவர்களைத் தவிர, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் அதில் பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக புதிய அரசின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையிலோ அல்லது குளிரூட்டப்பட்ட அரங்குகளிலோ நடைபெறுவதுதான் வழக்கம். ஆனால், அதற்கு மாறாக பொதுக் கூட்ட விழா போன்று பெரிய மைதானத்தில் ரியோ தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது.
முதல்வர் ரியோ 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்ததும், அவர் நாகாலாந்து பேரவைத் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com