பெண்கள் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பெண்களின் உரிமைகளை மீட்பதற்கு போராட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பெண்களின் உரிமைகளை மீட்பதற்கு போராட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. உறுப்பினர்களின் அமளியால், நாடாளுன்றத்தின் இரு அவைகளும் அலுவல் எதுவும் நடைபெறாமல் கடந்த 3 நாள்களாக முடங்கின.
இந்நிலையில், மாநிலங்களவை அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் வியாழக்கிழமை கூடியது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கட்சி வேறுபாடுகளை மறந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த 3 நாள்களாக, உறுப்பினர்களின் அமளியால் முடங்கிய மாநிலங்களவையில், கட்சி வேறுபாடுகளை புறந்தள்ளி அனைத்து உறுப்பினர்களும் பெண்களின் பிரச்னைகள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்தது அரிய நிகழ்வாக இருந்தது. இந்த விவாதம் முடிந்ததும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், தொழிலதிபர் நீரவ் மோடியின் வங்கிக் கடன் மோசடி குறித்து பிரதமர் மோடி மெளனம் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். 
மற்றொரு புறம், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் திரண்டு அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அதிருப்தியடைந்த வெங்கய்ய நாயுடு, அவையை பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும், துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தலைமையில் கூடியது. அப்போது, காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அவையின் மையப்பகுதியில் திரண்டு கோஷமிட்டனர். அமளிக்கு இடையே, 2017-18-ஆம் நிதியாண்டுக்கான துணை மானியக் கோரிக்கையை மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். எனினும், உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை நாள் முழுவதும் பி.ஜே.குரியன் ஒத்திவைத்தார்.
மக்களவையில்..: இதேபோல், மக்களவையிலும் காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் காலை 11 மணிக்கு கூடியது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த சுமித்ரா மகாஜன், பெண்களின் முன்னேற்றத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டால், சர்வதேச அரங்கில் இந்தியா நிச்சயம் தனியிடம் பிடிக்கும் என்று பேசினார்.
அவர் பேசி முடித்ததும் அதிமுக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். அமளிக்கு நடுவே, துணை மானியக் கோரிக்கையை நாடாளுமன்ற விவகாரங்கள் துணை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
அப்போது, வங்கிக் கடன் மோசடி விவகாரம் குறித்து வாக்கெடுப்பின்றி விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் கூறினார். எனினும், அமளி நீடித்ததால், அவையை நாள் முழ்வதும் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com