மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக,
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வியாழக்கிழமை வலியுறுத்தினர்.
மாநிலங்களவை அதன் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தலைமையில் வியாழக்கிழமை காலை கூடியது. அப்போது, சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி அனைத்து உறுப்பினர்களுக்கும், குறிப்பாக பெண் உறுப்பினர்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் இரு பாலரும் மகளிர் தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு:
கனிமொழி (திமுக): பெண்களின் மகத்துவம் குறித்தும், சாதனைகள் குறித்தும் பேசி வருகிறோம். ஆனால், உண்மை நிலை என்ன? பெண்கள் இன்றைக்கு முறையான பணிகளில் இருந்து வெளியேறிச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் முறையான பணிகளில் பெண்கள் வெறும் 27 சதவீதம் மட்டுமே உள்ளனர். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்நாட்டில் பெண் குழந்தைகள் இன்னும் வேண்டப்படாதவர்களாகவே உள்ளனர். வரதட்சிணைக் கொடுமை மரணங்கள் நிகழ்கின்றன. இவற்றுக்கெல்லாம் நாம் எப்போது முடிவு கட்டப் போகிறோம்? இதுபோன்ற சூழலில், மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதவை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்கின்றன. ஆனாலும், அவையில் இன்னும் நம்மால் இதை நிறைவேற்ற முடியவில்லை. இது அவமானகரமானதாகும். இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் நாங்கள் ஆதரிப்போம்.
திருச்சி சிவா (திமுக): பெண்களின் மேம்பாட்டுக்காக திடமாக ஏதாவது நாம் செய்தாக வேண்டும். இந்த வழியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அனைவரின் பரிந்துரையாகும். சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், ஏழைப் பெண்கள், கிராமப்புற பெண்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
டாக்டர் வா.மைத்ரேயன் (அதிமுக): சமகால இந்தியாவின் வலிமையான பெண் தலைவர்களில் ஒருவராக மிளிர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரதிநிதிகளில் ஒருவராக என்னுடைய வாழ்த்துகளை அவையின் உள்ளே, வெளியே உள்ள நாட்டின் அனைத்து சகோதரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தருணத்தில், மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதவை விரைந்து நிறைவேற்றவும், ஜூலையில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவி காலியாகும் போது பெண் ஒருவரை அப்பதவிக்கு அமர்த்தவும், ஆறுகளைத் தாயாக அழைக்கும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தில், தாய் காவிரி வாரியத்தை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களுக்கான அதிகாரமளித்தலுக்காக நாம் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூக, கலாசார ரீதியில் அதிகாரமளித்தல் அவசியமாகும். நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்தில் இருந்து இதற்கான நடவடிக்கை தொடங்கும் விதமாக, மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்): கடந்த 60-70 ஆண்டுகளில் பெண்களின் மேம்பாடு சிறிதளவில்தான் உள்ளது. பணியிடங்களில் பெண்கள் மீதான தொந்தரவு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. புதிய தாராளமயக் கொள்கைகளால் தலித்துகள், ஆதிவாசிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றைக் கருத்தில் கொள்வது அவசியமாகும். பெண்கள் அதிகாரமளித்தலுக்காக தந்தை பெரியார் அளப்பரிய பங்காற்றியுள்ளார். அவரது கருத்துகள் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். பெண்கள் அதிகாரமளித்தலுக்காக காட்சி ஊடகங்களையும், அச்சு ஊடகங்களையும் தினமும் குறைந்தபட்சம் ஐந்து அல்லது 10 நிமிடங்களாவது நாம் பயன்படுத்த வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com