மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை விரைந்து நிறைவேற்ற எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவையிலும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும்

நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவையிலும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் வியாழக்கிழமை வலியுறுத்தினர்.
மாநிலங்களவை அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் காலையில் கூடியதும், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உலகம் முழுவதும் சாதனை படைத்து வரும் பெண்களைப் பாராட்டியதுடன், பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும், பாலின பாகுபாடு பிரச்னைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று பேசினார்.
நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்கும்போது, வளர்ச்சிப் பாதையில் நாடு வேகமாக முன்னேற வேண்டுமெனில் பெண்களுக்கு அரசியல்-சமூக-பொருளாதார ரீதியில் அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். வெங்கய்ய நாயுடு பேசி முடித்தவுடன் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஏற்கெனவே, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, மக்களவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அம்பிகா சோனி பேசுகையில், 'மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக, இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
அவரைத் தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் பேசுகையில், 'நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்றார். பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சுற்றுச்சூழலை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன். பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்தாலும், ஆணாதிக்கம் நிறைந்த துறைகளுக்குள் நுழைந்தாலும், பெண்களுக்கு அநீதி இழைப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது வெட்கக்கேடான விஷயம்.
பெண்களைப் பற்றிய மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு மிகப்பெரிய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகளை வெங்கய்ய நாயுடு ஏற்றுக் கொண்டார். எனினும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நீரவ் மோடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com