ரூ.400 கோடி மோசடி: முதலீட்டு நிறுவன இயக்குநர் கைது

முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.400 கோடி வட்டித் தொகையை தராமல் மோசடி செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிதி

முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.400 கோடி வட்டித் தொகையை தராமல் மோசடி செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிதி ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர், அவரது மனைவி உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் சாகர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதலீட்டாளர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அந்நிறுவனம் அளிக்கிறது.
பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்), ஓய்வூதியத் திட்டம், நிரந்தர வைப்பு நிதி (ஃபிக்ஸ்டு டெபாசிட்) உள்பட பல்வேறு முதலீட்டு திட்டங்களையும், சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்குகிறது. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) கீழ் அங்கீகாரம் தங்களிடம் உள்ளதாகக் கூறி முதலீட்டாளர்களை தங்களது வசம் அந்நிறுவனம் ஈர்த்ததாகத் தெரிகிறது.
முதலீட்டாளர்கள் அனைவருக்கும் 15 சதவீத வட்டித் தொகைக்கான உத்தரவாதத்தை அதன் இயக்குநர் ஸ்ரீராம் சமுத்திராவும், அவரது மனைவி அங்காவும் அளித்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து வட்டித் தொகயை அவர்கள் வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறைக்கு வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது சுமார் 4,000 முதலீட்டாளர்களுக்குச் சேர வேண்டிய ரூ.400 கோடி வட்டித் தொகையை ஸ்ரீராம் மற்றும் அவரது குடும்பத்தினர் அளிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து கணவன், மனைவி மற்றும் அவர்களது உறவினர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீராம் மற்றும் அவரது நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com