உடல் எடை குறைய வேண்டுமா? கார்த்தி சிதம்பரம் சொல்லும் ஆலோசனை பிடிக்கிறதா பாருங்கள்

12 நாள் சிபிஐ காவல் முடிந்து பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்தி சிதம்பரம், சிபிஐ-யை நக்கலடிக்கும் விதத்தில் கருத்துக் கூறினார்.
உடல் எடை குறைய வேண்டுமா? கார்த்தி சிதம்பரம் சொல்லும் ஆலோசனை பிடிக்கிறதா பாருங்கள்


புது தில்லி: 12 நாள் சிபிஐ காவல் முடிந்து பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்தி சிதம்பரம், சிபிஐ-யை நக்கலடிக்கும் விதத்தில் கருத்துக் கூறினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 12 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்.

12 நாள் சிபிஐ காவல் முடிந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட கார்த்தி சிதம்பரம் சற்று வாடித்தான் போயிருந்தார்.

நீதிமன்ற வாயிலில் நின்றிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நான் சாப்பிடும் ஆர்வத்தையே இழந்துவிட்டேன். மிகக் குறைவாகத்தான் சாப்பிடுகிறேன். அதனால் எனது உடல் எடை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஒரு வகையில் அது நல்லதுதான் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், எனக்கு புதிய ஆடைகள் தேவை. தன்னிடம் இருக்கும் ஆடைகள் எல்லாம் தொளதொளவென ஆகிவிட்டது. எனவே யாருக்காவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் சிபிஐ-யின் தொலைபேசி எண்ணுக்கு அழையுங்கள் என்று சிரித்தபடியே கூறினார்.

சிபிஐ காவலில் இருந்த கார்த்தி சிதம்பரம், செல்போன் மற்றும் கைக்கடிகாரம் கூட பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இது பற்றி அவர் தனது வழக்குரைஞரிடம் கூறுகையில், எனக்கு இது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. அடிக்கடி சிபிஐ அதிகாரிகளிடம் இப்போது என்ன நேரம் என்று கேட்டுக் கொண்டிருந்தேன் என்றார்.

சிபிஐ அதிகாரிகள் மீது கார்த்தி சிதம்பரம் எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. மரியாதையுடனே நடத்தியதாகவும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார்.

கார்த்தி சிதம்பரத்தை 12 நாட்களுக்கு திகார் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com