காவிரி: நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் அமளி தொடர்கிறது!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். 
காவிரி: நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் அமளி தொடர்கிறது!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். 
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி தொடங்கிய மார்ச் 5-ஆம் தேதி முதல் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு மக்களவை திங்கள்கிழமை காலையில் அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடியதும், காவிரி விவகாரத்தை மக்களவை அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால் மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்கள் எழுப்பினர். 
அவர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் பதாகைகளை காண்பித்தவாறு அமளியில் ஈடுபட்டனர். 
இதேபோன்று, காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சி உறுப்பினர்கள் வேறு விவகாரங்களை எழுப்பினர். இதையடுத்து, அவையை 12 மணி வரை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார். பின்னர், மீண்டும் 12 மணிக்கு கூடியதும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 
இதனால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். 
இதனால், அவையில் கேள்வி நேரம், பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை அவையின் கவனத்திற்கு உறுப்பினர்கள் கொண்டு வரும் பூஜ்ய நேரம் உள்ளிட்ட அலுவல்கள் ஏதும் நடைபெறவில்லை.
மாநிலங்களவையில்..: மாநிலங்களவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அதன் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடியதும், பல்வேறு துறை அமைச்சர்கள் ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரும் விவகாரத்தை எழுப்பினர். 
அதிமுக, திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம், திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வேறு விவகாரங்களை எழுப்பினர். தொடர்ந்து எழுந்த அமளியால் அவையை பிற்பகல் 2 மணி வரை அதன் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார். 
அவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் அவை பிற்பகலில் மீண்டும் கூடிய போது உறுப்பினர்களின் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


பிரதமரை சந்திப்பது எப்போது?
மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, விஜய் சௌக் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரையிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்திப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, "காவிரி மேலாண்மை அமைக்கும் வரை அதிமுக எம்பிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பர். அதற்காகத்தான் மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பிரதமரைச் சந்திப்பது தொடர்பாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கடிதம் அளித்துள்ளனர். அவர்கள் பிரதமரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் போது, நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்களும் அவர்களுடன் சென்று பிரதமரைச் சந்திப்போம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com