மாநிலங்களவையின் மிகப் பணக்கார உறுப்பினராகிறார் பிரபல நடிகரின் மனைவி

மாநிலங்களவையின் மிகப் பணக்கார உறுப்பினர் என்ற பெருமையை உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜவாதி கட்சியின் வேட்பாளராக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஜெயா பச்சன் பெறுகிறார்.
மாநிலங்களவையின் மிகப் பணக்கார உறுப்பினராகிறார் பிரபல நடிகரின் மனைவி


புது தில்லி: மாநிலங்களவையின் மிகப் பணக்கார உறுப்பினர் என்ற பெருமையை உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜவாதி கட்சியின் வேட்பாளராக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஜெயா பச்சன் பெறுகிறார்.

இவர் வெற்றி பெற்று மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால், ரூ.1000 கோடி சொத்துக்களுடன் மாநிலங்களவையிலேயே மிகப் பணக்கார உறுப்பினர் என்ற பெருமையை ஜெயா பச்சன் பெறுவார். 

இதற்கு முன்பு 2014ம் ஆண்டு பாஜக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற ரவீந்திர கிஷோர் சின்ஹா ரூ.800 கோடி சொத்துக்களுடன் பணக்கார எம்.பி.யாக திகழ்ந்தார்.

2 நாட்களுக்கு முன்பு, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட சமாஜவாதி கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் ஜெயா பச்சன், தனக்கும் கணவர் அமிதாப் பச்சனுக்கும் ரூ.460 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும், ரூ.540 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தம்பதிக்கு ரூ.62 கோடி மதிப்பிலான நகைகள் இருப்பதாகவும், 12 விலை உயர்ந்த சொகுசு கார்கள் இருப்பதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.13 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு பிரான்ஸிலும் சொத்துக்கள் உள்ளன. இதுதவிர, நொய்டா, போபால், புனே, அகமதாபாத், காந்திநகரிலும் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பிக்களை தேர்வு செய்ய நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். 

சமாஜவாதி கட்சியின் சார்பில் இந்த மனுவை அவர் தாக்கல் செய்தார். அவருடன் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜவாதிக்கு 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினரைத் தேர்வு செய்ய அரசியல் கட்சிகளுக்கு 37 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தாலே போதுமானதாகும். இதனால், சமாஜவாதி கட்சி சார்பில் ஜெயா பச்சன், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com